சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு 14ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், டாஸ்மாக் ஓப்பன் உள்பட கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்ய தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மே, 24ந்தேதி முதல், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 7ம் தேதியில் இருந்து, வரும், 14ம் தேதி வரை, தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில், பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, . நோய் பரவல் அதிகம் உள்ள, 11 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், மளிகை, காய்கறி, பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதுஎலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் கடைகள் போன்றவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அரசு அறிவித்த முழு ஊரடங்கு, 14ம் தேதி காலையுடன் முடிய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் .கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், மருத்துவ குழுவினர், முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க, பரிந்துரை செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், கொரோனா நோய் பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில், மேலும் சில தளர்வுகளையும், டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்தும், அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. மேலும், இ-பாஸ் நடைமுறை தளர்த்தப்படும் என்றும், டாஸ்மாக் கடைகள் குறிப்பிட்ட நேரம் திறந்திருக்க அனுமதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.