பனாஜி: மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவோடு, அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் சுற்றுலா மையமான கோவா தடுமாறி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் மத்திய அரசானது, ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. வரும் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். யூனியன் பிரதேசமான கோவாவில் ஊரடங்கின் காரணமாக, மக்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. ஊரடங்கை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஏற்கனவே காவல்துறைக்கு சுதந்திரம் அளித்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் பொதுமக்களை துன்புறுத்தும் வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோவா பீப்பிள்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு குரல் எழுப்பியது.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த தொடர்ந்து அரசு தொடர்ந்து மாறி, மாறி அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது. அதனால், மக்கள் குழம்பி போய் சாலைகளில் உள்ளனர். இந்த நிலைமையில் மக்கள் மீது குறை கூறுவது என்பது பொறுப்பை தட்டி கழிப்பதாகும் என்று அந்த அமைப்பு கூறி இருக்கிறது.

போதிய முன் தயாரிப்புகள், நடவடிக்கைகள் இன்றி கோவா அரசாங்கம் சில நாட்களாக தடுமாற்றமான சூழலில் உள்ளது. இது பற்றி பத்திரிகையாளர் மிஹிர் சர்மா தமது ட்விட்டரில், கோவாவிலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் கவலையானவை.

மளிகைப் பொருட்கள் ஏன் இல்லை, முதல்வர் ஏன் மத்திய துணை ராணுவப் படைகளைக் கேட்கிறார்?  என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். சமூக தனிமைப்படுத்துதல் அறிவுறுத்தப்பட்ட போது, முதலமைச்சர் சாவந்த் பஞ்சாயத்து தேர்தலை நடத்த மறுத்துவிட்டார். தேர்தல் பிரச்சாரம் என்று திரளான மக்களுடன் பேரணிகள் நடத்துகிறார்.

அதன்பிறகு ஊரடங்குக்கு அவசியமான நடவடிக்கைகளை அவர் எடுக்க முனைந்தார். தொழில்முனைவோரும், நடிகருமான கவுரவ் பக்ஷி பேசுகையில், மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே,தொடர்ந்து பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

மேலும் முகமூடி இல்லாமல் கோவா மருத்துவ மையத்திற்குச் சென்றார். அவருக்கு செல்பி எடுக்க நேரம் இருக்கிறது. ஆனால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அவருக்கு நேரம் இல்லை என்றார். இதே போன்ற விமர்சனத்தை தான் திரையுலக பிரபலமான அபுர்வா அஸ்ரானி முன் வைத்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது: மளிகை பொருட்கள் வாங்க ஒரு கடை கூட திறக்க அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் ரொட்டியைத் தேடி வெளியேறினால்,போலீசாரால் தாக்கப்படுகிறோம்.  கொரோனா வைரசுக்கு முன் பட்டினி எங்களை கொல்லும் என்று விமர்சித்து இருக்கிறார்.