ஐதராபாத்: கொரோனா ஊரடங்கு காரணமாக, எம்.பில், எம்பிஏ பட்டம் பெற்ற ஹைதராபாத் ஆசிரியர்கள் தினசரி கூலி தொழிலாளர்களாக மாறி உள்ளனர்.
கொரோனா வைரசும், அதன் பிறகு அறிவிக்கப்பட்ட ஊரடங்கும் நாடு முழுவதும் பலரின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் 12 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்துவிட்டு, இப்போது தினசரி கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.
ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட, ஊதியம் இல்லை. சமூகப் பணிகளில் எம்.ஏ., கிராமப்புற வளர்ச்சியில் எம்.பில் மற்றும் பி.எட் ஆகிய மூன்று பட்டங்களை பெற்ற சிரஞ்சீவி, தனது குடும்பத்தில் உள்ள 6 பேரை காப்பாற்ற ஒரே வழி இது என்று நம்புகிறார்.
அவரது மனைவி பத்மா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். எம்பிஏ பட்டமும் பெற்றவர். சிரஞ்சீவியுடன் கைகோர்த்துள்ளார். இந்த ஜோடி கடந்த ஒரு வாரமாக தினசரி கூலி தொழிலாளர்களாக கொளுத்தும் வெயிலில் வேலை செய்து வருகின்றனர்.
ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த குடும்பத்தின் மாத வருமானம் 60000 ரூபாய் ஆகும். ஆனால் இப்பாது வருமானம் பூஜ்யம். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தினசரி கூலி தொழிலாளர்களாக பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் முதுகலை பட்டங்களை பெற்றவர்கள். பல ஆண்டுகளாக கற்பித்தல் பணியில் இருக்கின்றனர். இப்போது வரை, விவசாயி தற்கொலைகளை நாங்கள் கண்டிருக்கிறோம். இனி ஆசிரியர்கள் அடுத்ததாக இருப்பார்கள்,
யாரும் ஏப்ரல் சம்பளத்தைப் பெறவில்லை, ரேஷன் கார்டுகள் வைத்திருந்தாலும் ரேஷன் கிடைக்கவில்லை என்கிறார் சிரஞ்சீவி. மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஆசிரியர்களும் ஒரே சூழ்நிலையில் உள்ளனர்.
அவர்களில் சிலர் தினமும் ஆசிரியர் சங்கங்களை அழைத்து, உதவி செய்யுமாறு கோருகின்றனர் என்கிறார் ஆந்திராவின் சித்தூர் மாவட்ட கல்லூரி ஆங்கில விரிவுரையாளர் பி. மணி. இவர் இப்போது ஏரிகளை சுத்தம் செய்யும் பணிக்கு செல்கிறார். அவருக்கு ஒரு நாள் சம்பவம் 250 ரூபாய் ஆகும்.