சென்னை உள்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு… மருத்துவ நிபுணர் குழு தகவல்

Must read

சென்னை:
சென்னை உள்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க வற்புறுத்தியதாகவும், தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக விலக்கலாம் என்று தெரிவித்ததாகவும், முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ளதால், ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தமிழகஅரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவினருடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வருடனான  ஆலோசனைக் கூட்டத்திற்கு  பிறகு செய்தியாளர்களை சந்தித மருத்துவ நிபுணர் குழுவின் தலைவரும்,  ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனரும் மூத்த விஞ்ஞானியான பிரதீப் கவுர், “கோவிட் 19  வைரஸ் குறித்து முழுமையாக இன்னும் அறிய முடியவில்லை. ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
நகரங்களில்  மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது. சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை மேலும், அதிகரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளதாகவும், அப்படி  அதிகரிக்கும் போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால்,  அதற்காக பயப்பட கூடாது. பரிசோதனை அதிகப்படுத்துவதன் மூலம் தான் இதை குணப்படுத்த முடியும் என்று கூறினர்.
பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கட்டாயம் மாஸ்க் அவசியம். ஆனால், பலர்  ஒருவருக்கொரு வர் பேசும்போது மாஸ்கை தளர்த்தி விடுகின்றனர். அது தவறு… அதுதான் கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்தவர்கள், பல நாடுகளில் 99% மாஸ்க் அணிவதன் மூலமே பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்று தெரிவித்தனர்.
சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை இயக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். வழிப்பாட்டு தளங்களை திறக்கக்கூடாது. சென்னையில் கொரோனா சமூக பரவல் இல்லை. கொரோனாவில் இருந்து வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தளர்வுகளை அறிவிக்கலாம், ஆனால்; மொத்தமாக அறிவிக்க முடியாது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுப்பாடு தொடர வேண்டும் என்று முதல்வரிடம் எடுத்துக் கூறியுள்ளோம்.  அதுபோல,  பேருந்து  ரயில் இயக்கம், கோயில், மண்டபங்கள் திறந்தால் சென்னையில் பாதிப்பு மேலும் அதிகமாகும் வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

More articles

Latest article