கொழும்பு

கடந்த ஜூன் 1 முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் இங்கு மார்ச் மாதம் 2 ஆம் வாரத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.  முதல் கொரோனா மரணம் மார்ச் 20 அன்று நிகழ்ந்தது.  அதையொட்டி கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மார்ச் 20 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன் பிறகு கொரோனா தாக்கம் குறைந்த வந்தது.  இரவில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.  மே மாதம் இரண்டாம் வாரம் வரை இந்நிலை தொடர்ந்தது.  அதன் பிறகு அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் குறைந்த நபர்களுடன் இயங்க தொடங்கின

ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.   அப்போதும் இரவு 11 மணியில் இருந்து காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.  கடந்த 14 ஆ தேதி முதல்  இரவில் 4 மணி நேரம் மட்டுமே ஊரடங்கு அமலில் இருந்தது.

இந்நிலையில் இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஏப்ரல் 30 முதல் சமூக தொற்று இல்லை என்பதாலும் ஜூன் 1 முதல் உயிரிழப்பு இல்லை என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.