டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் 5 மாநில சட்டமன்ற தேர்தல், தொற்று பரவல், தடுப்பூசி பூஸ்டர் டோஸ், குழந்தைகளுக்கான தடுப்பூசி, தொற்று பரவலை தடுக்க மீண்டும் லாக்டவுன் போடுவது உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 781 ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகி உள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் பரவி உள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 9,195 புதிய கோவிட்19 வழக்குகளும் பதிவாகியுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூட உத்தரவிப்பட்டு உள்ளது. மேலும் மினி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்றும், 5 மாநில சட்டமன்ற தேர்தல், கொரோனா பரவல், கொரோனா தடுப்பு நடவடிக்கை, லாக்டவுன், கல்வி நிலையங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த வியாழன் அன்று பிரதமர் மோடி, அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கூடுதல் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் போது, புதிய வகைகளை மனதில் வைத்து நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.