விஜயவாடா

பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என ஆந்திர மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது.   இதைப் போல் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.  ஆனால் பாஜக தலைவர் ஒருவர் பாஜகவுக்கு வாக்களித்தால் மலிவு விலையில் மது விற்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு நேற்று விஜயவாடாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.  அப்போது அவர், “வரும் 2024 ஆம் வருடம் பாஜக ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.  அதற்கு மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பாஜகவுக்கு மக்கள் ஒரு கோடி வாக்களித்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரூ.70 விலையில் மதுபானங்களை அளிப்போம்.   தவிர அதிக அளவில் நிதி இருந்தால் ரூ.50 விலையில் மதுபானம் அளிக்கப்படும்” என உரையாற்றி உள்ளார்.  மதுவிலக்குக்கு ஆதரவாக உள்ள பாஜக கட்சியின் தலைவர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.