ண்டன்

கொரோனா பரவுதலால் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெகு விரைவில்  தளர்த்தப்படும் என ஒரு அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார்

பிரிட்டனில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா தாக்குதலால் இளவரசர் சார்லஸ், பிரதமர் உள்ளிட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.   அங்கு ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகின.  ஆயினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.   இருந்தாலும் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போது அங்கு வெயில் கடுமையாக உள்ளதால் மக்கள் வார இறுதி நேரத்தில் வெளியே செல்லக் கூடாது என அந்நாட்டின் தலைமை செவிலியர் உள்ளிட்ட பலரும் எச்சரித்துள்ளனர்.   நாட்டில் சுமார் 20000 மக்கள் மரணம் அடையலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் அதை விடக் குறைவானவர் மரணம் அடைந்தது ஓரளவு நல்லதாக உள்ளதாகப் பிரிட்டன் சுகாதாரச் செயலர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பிரிட்டனில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.  இது குறித்து அரசின் ஆலோசகரான நீல் ஃபர்குசன், “கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புக்கள் குறைந்து வருவது நல்ல அறிகுறியாகும்.    இது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதன் மூலம் சீனாவில் நடந்தது போல் பாதிப்பு வெகுவாக குறையலாம் எனத் தோன்றுகிறது.  இந்நிலை நீடித்தால் கொரோனா ஊரடங்கு சற்று தளர்த்தப்பட வாய்ப்பு உண்டு.   தற்போது பின்பற்றப்பட்டு வரும் சமூக இடைவெளியால் இந்த பாதிப்பு குறைந்துள்ளது.  எனவே விதிகள் தளர்த்தப்படும் போது இதற்குப் பதில் வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம்.

தற்போதுள்ள நிலவரப்படி விதிகள் இன்னும் ஓரிரு வாரங்களில்  தளர்த்தப்பட வாய்ப்புண்டு.  ஆயினும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குறைந்தது மே மாத இறுதி வரையாவது தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும்.  இவை அனைத்தும் சோதனை மற்றும் சோதனை தொழில் நுட்பத்தைப் பொறுத்து அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.