ஊரடங்கு தளர்வு மற்றும் COVID-19-க்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்படுவதை ஆஸ்திரேலிய விஞ்ஞானியும், நோயெதிர்ப்பு நிபுணருமான பீட்டர் சார்லஸ் டோஹெர்டி எச்சரிதுள்ளார். மேலும் இந்த மலேரியா எதிர்ப்பு மருந்தின் தற்போதைய மற்றும் பிறகான திட்டமிட்ட பரிசோதனைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். COVID-19 நெருக்கடியை அரசாங்கம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹெர்டி, இந்தியா போன்ற அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடுகளைப் பற்றி கவலை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் என்று எச்சரித்த ஆஸ்திரேலிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும், நோயெதிர்ப்பு துறை நிபுணருமான, டோஹெர்டி “அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குச் செல்லும் வகையிலான, ஒரு பயனுள்ள தடுப்பு மருந்தை பெற, குறைந்தபட்சம் 9 முதல் 12 மாதங்கள் வரை ஆகலாம்” என்றார். “அனைத்து சோதனைகளும் சரியாக நடந்தால், சில தடுப்பு மருந்துகள் செப்டம்பர் / அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பின்னர், இந்த தடுப்பு மருந்தின் வகை, தயாரிப்பு முறை மற்றும் குப்பியில் அடைத்தல் போன்றவற்றை சார்ந்தே, தினசரி தடங்கலின்றி கிடைக்குமா என்பதைக் கூற முடியும்” என்று மெல்போர்னில் இருந்து ஒரு மின்னஞ்சல் நேர்காணலில் டோஹெர்டி பி.டி.ஐக்கு கூறினார்.
“தற்போதைய புதிய கொரோனா வைரஸ், இன்ஃப்ளூயன்ஸாவைப் போல வேகமாக மாறாது. எனவே, இதுவரை அறியப்பட்டவற்றிலிருந்து, ஒரே தடுப்பு மருந்து அனைத்து இடங்களிலும் வேலை செய்யும்” என்று மேலும் கூறினார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் டோஹெர்டி நிறுவனத்தில் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையுடன் இருக்கும் டோஹெர்டி, 1996 ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றவர். மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களை, பாதிக்கப்படாத சாதாரண செல்களில் இருந்து எவ்வாறு வேறுபடுத்துகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பற்றி பேசும்போது, “இது முற்றிலும் விஞ்ஞானம் சார்ந்த விஷயமாக இருந்தால், எல்லா இடங்களிலும் பூட்டியே இருக்கலாம். ஆனால், அது ஒரு பொருளாதாரம் மற்றும் சமூகம் சார்ந்ததாக உள்ளது. எனவே, அப்படியே தொடர்வது என்பது சாத்தியமற்றது. நான் என்ன எதிர்பார்க்கலாம் எனில், நோயாளிகளின் எண்ணிக்கை உயரும். நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது பொறுப்பில் இருக்கும் நபர்களின் செயல்பாடு, நோய் எதிர்ப்பு செயல்பாடுகள், விரிவான தொடர்பு சங்கிலியின் மீதான பரிசோதனை திறன்கள் போன்றவற்றைப் பொறுத்தது” என்றார். இந்தியா போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த நாட்டில் இது மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ” என்றும் விஞ்ஞானி கூறினார். இரண்டாவது சுற்று நோய் பரவல் பற்றி WHO எச்சரித்த போதிலும், இந்தியா உட்பட பல நாடுகள் மே மாத மத்தியில் இருந்து ஓராண்டு கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஊரடங்கு மார்ச் 25 அன்று தொடங்கி, பின்னர் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது.
ஊரடங்கிற்கு மாற்று வழிகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டதற்கு, 79 வயதான அவர், “எல்லைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. உதாரணமாக, தென் கொரியா போன்ற மிகவும் ஒழுக்கமான மக்கள்தொகை கொண்ட ஒரு செல்வந்த நாட்டில், பெரும் அளவிலான, தீவிர சோதனை மற்றும் தொடர்பு சங்கிலிகளைப் பின்தொடர்ந்து கண்காணிப்பதை சரியாக நடத்தியது. இல்லையெனில், பயனுள்ள தடுப்பு மருந்து வரும்வரை வேறு வழி இல்லை” என்றார். சமூகத்தில் ஏற்கனவே அதிக அளவில் நோய் பரவல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதைத் தவிர்த்து எல்லைகளை மூடுவதில் பயனில்லை என்றார். டோஹெர்டியின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் “இயற்கையிலிருந்து நேரடியாக வெளிவந்த ஒரு புதிய வைரஸ்”. சர்வதேச விமானங்கள் மற்றும் சுற்றுலா கப்பல்களில் பயணிப்பதால் இது (வைரஸ்) உலகம் முழுவதும் மிக வேகமாக பரவியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
COVID-19 க்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதையும் அவர் எதிர்த்தார். இந்த மலேரியா எதிர்ப்பு மருந்தின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்டுள்ள பரிசோதனைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். நோய் ஏற்கனவே கடுமையாக இருக்கையில் இந்த மருந்தைப் பயன்படுத்துவது நிச்சயமாக முரணான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றார். ஆனால், “ஒரு மருத்துவரில் ஆலோசனையின் பேரில், அவரின் கண்காணிப்பின் கீழ் பயன்படுத்துதல் அல்லது ஒரு தடுப்பு மருந்தாக எடுத்துக் கொள்ளுதல் ஏதேனும் பயன் தருமா என்று தெரியவில்லை” என்றார். மேலும், “அதற்கான உரிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை” என்றார் டோஹெர்டி. பாதுகாப்பு குறித்த சிக்கல்களை சுட்டிக்காட்டி இந்த மருந்துகளின் மருத்துவ பரிசோதனைகளை WHO இடைநிறுத்திய பின்னரும் கூட, COVID-19 க்கு எதிரான ஒரு தடுப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆதரித்துள்ளது. COVID-19 க்கு பிளாஸ்மா சிகிச்சையானது ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்க முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, டோஹெர்டி கூறினார், “எங்களுக்கு ஒழுங்காக கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் இல்லை. ஆனால் குறிப்பாக பிளாஸ்மா ஆன்டிபாடி அளவுகள் சோதிக்கப்பட்டு, நல்ல செயல்பாட்டிற்கான சான்றுகள் இருந்தால், அது உதவியாக இருக்கும். எனக்கு நோய் இருந்தால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டால், நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். ஆனால், நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுக்க மாட்டேன். ” என்றார்.
SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு எதிராக வளரும் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து டோஹெர்டி மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி என்பது, மக்கள் தொகையில் 60% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோது, வெளிப்படையான விளைவைக் கொடுக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு தடுப்பு மருந்தின் மூலம் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே சிறந்த நம்பிக்கையான வழி, ” என்று அவர் கூறினார். கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி என்பது தொற்று நோயிலிருந்து மறைமுக பாதுகாப்பின் ஒரு வடிவமாகும். இது, மக்கள் தொகையின் ஒரு பெரிய பகுதிக்கு, தடுப்பு மருந்து அல்லது முந்தைய நோய்த்தொற்றுகள் மூலமாக உண்டாகியிருந்தாலும், தொற்றுநோயிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியாக உருமாறும்போது உண்டாகிறது. COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 5.9 மில்லியனையும், 3,65,000 இறப்புகளையும் தாண்டிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில், இறப்பு எண்ணிக்கை 4,971 ஆகவும், நோயாளிகளின் எண்ணிக்கை 1,73,763 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது. பீகார், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்கள் மே மாத தொடக்கத்தில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மே 4 அன்று 3,000 – இல் இருந்து, மே 26 அன்று 6,532 ஆக உயர்ந்தது. இதேபோல், பீகாரின் எண்ணிக்கை 500 – இல் இருந்து 2,700 ஆக உயர்ந்தது. இது நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரம்!
தமிழில்: லயா