கொல்கத்தா
மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாடெங்கும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு அது இருமுறை நீட்டிக்கப்பட்டு மூன்றாம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.
இதற்கு முன்பே மகாராஷ்டிரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்திலும் மே மாதம் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதில் ஒரு சில விதிகளையும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அதன்படி இரவு நேர முழு ஊரடங்கு அவசியமாக்கப்படவில்லை என்றாலும் மக்கள் இரவு 7 மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் வரும் 27 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் இல்லாத பகுதிகளில் மட்டும் வர்த்தகர்கள் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார்.