சென்னை:
டைபெற இருக்கும்  உள்ளாட்சி தேர்தலை கண்காணிப்பதற்காக, சென்னை வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
local-police
தமிழக உள்ளாட்சி தேர்தல்  அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நடவடிக்கைகள் நேற்று முதல் துவங்கி விட்டன .
சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கான தேர்தல்  அக்டோபர் மாதம் 19ந்தேதியன்று நடக்கிறது. இது தவிர  சென்னை காவல்துறை எல்லைக்குள் வரும் 98வார்டுகளுக்கும் சேர்த்து சென்னை போலீசாரே பாதுகாப்பு வழங்குவர்.
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள், பொதுமக்களுக்கு  உரிய பாதுகாப்பு வழங்கவும் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெறவும் சென்னை காவல்துறை சார்பில் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டறையில் கூடுதல் துணை ஆணையர் பாலசுப்ரமணியம் தலைமையில்,  சென்னையில் உள்ள வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு காவல் மண்டலங்களுக்கு தலா ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 25 காவலர்கள் பணியாற்றுவார்கள்.
தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தக் குழு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட 298 வார்டுகளில் உள்ள 7552 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 300 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என முதல் கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அதை தீவிரமாக கண்காணிக்க  உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில்  பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது,  உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ளவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக் காவல் குழுவினர் ஆலோசனை செய்து காவல் ஆணையருக்கும், தேர்தல் அதிகாரிக்கும் அறிக்கை அளிப்பார்கள்.
இந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.