சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெற இருந்தது. திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. மேல்முறையீடு மனுவிலும் நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ததை உறுதி செய்தனர்.
உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ஒட்டி, தமிழகத்தில் அமலில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 25ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையர் வெளியிட்டார். உடனடியாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கலும் தொடங்கியது.
தமிழக தேர்தல் கமிஷனின் இந்த செயலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இட ஒதுக்கீடுகள் சரியாக பின்பற்றவில்லை என்று புகார் கூறப்பட்டது.
அதையடுதது திமுக சார்பில் வழக்கு தொடரட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் ரத்துசெய்து, கடந்த இருதினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று, மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
அப்போது, ஆஜரான தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் குமார், வேட்புமனுக்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளதாகவும், எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறினர்.
மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 18-ம் தேதி நடைபெறும் என்றும், அன்றையதினம், தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக, திமுக பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக நேற்று தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் மாநில தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் வேட்புமனு தாக்கலின் போது கட்டிய பணத்தை திரும்பப் பெறுவதில் வேட்பாளர்கள் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.