சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். முதல்கட்டமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது விடுபட்ட 9 மாவட்டங்களில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி, செப்டம்பர் மாதத்திற்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும் வேலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பணியை தொடங்கியுள்ளது.
இதையொட்டி அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.
முதற்கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
அதனை தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்த, அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.