சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில்,  சென்னை மேயர் பதவிக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். அதுபோல, புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஆவடி மாநகராட்சிக்கு, முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ஜெயவர்தன், தற்போது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் விருப்பமனுக்கள் வழங்கி வருகின்றன.  அதன்படி அதிமுக சார்பில் நேற்று விருப்பமனு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. சென்னை உள்பட  தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட அதிமுக அலுவலகங்களில் விருப்ப மனுக்களை இன்றும் நாளையும்  வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர மேயர் பதவிக்கு, முன்னாள் அதிமுக மக்களவை உறுப்பினரும், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமாகிய ஜெயவர்தன்  போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு பெற்றுள்ளார்.

அதுபோல  ஆவடி மாநகராட்சிக்கு, முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை மாநகராட்சி மேயராக ஆசைப்பட்டு, 8 பேர் மனு தாக்கல் செய்தனர். வார்டு கவுன்சிலல் பதவிக்கு ஒரே நாளில், 361 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கின்றனர்.

கோவை மாநகர் மாவட்டத்துக்கு எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன், அண்ணா தொழிற்சங்க பேரவை கிருஷ்ணன் உள்ளிட்டோர் கட்சியினரிடம் மனுக்களை பெற்றனர்.புறநகர் மாவட்டத்தில், அமைப்பு செயலாளரான, முன்னாள் அமைச்சர் தாமோதரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மனுக்கள் பெற்றனர்.

மாநகராட்சி கவுன்சிலர் பதவி, மேயர் மற்றும் பேரூராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிக்கு என, தனித்தனியாக பிரித்து, விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதால், பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு சர்மிளா, மலர்விழி, ஜெயராமன் உட்பட, 8 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

கவுன்சிலர் பதவிக்கு, மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட, 79 வார்டுகளுக்கு, 270 பேர், புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட, 21 வார்டுகளில், 91 பேர் வீதம் மொத்தம், 100 வார்டுகளுக்கு, 361 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.இன்றும் வேட்பு மனு பெறப்படுகிறது.

தொடர்ந்து ஏராளமானோர் கவுன்சிலர் பதவிக்கும் விருப்பமனு வாங்கி வருகின்றனர்.