டில்லி,
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாது என்று வலியுறுத்திய இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேலுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக விவசாயிகள் அணியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் கடந்த 25 நாட்களாக டில்லியில் போராடி வருகின்றனர். அதுபோல உ.பி. முதல்வர் யோகியும் ரூ.36,359 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் பாரதியஜனதனா கட்சியின் எம்.பி.யும், விவசாய பிரிவு தலைவருமான வீரேந்திர சிங் கூறியதாவது:
வங்கிகள் அனைத்தும் இப்போது மனிதத்தன்மையை மறந்து லாப நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளன. வங்கிகளின் கணக்குகளை எடுத்துப் பார்த்தால் அதில் கடன் பெற்ற விவசாயி களில் 95 சதவீதம் பேர் முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தியிருப்பது தெரியவரும்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது மகாராஷ்டிரம், தமிழகம் என வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் வறட்சியால் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் விவசாயக் கடன்களை மாநில அரசுகள்தான் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு இதில் மாநிலங்களுக்கு உதவ முடியாது.
கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தாற்காலிகமான தீர்வுதான். விவசாயி களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்றார்.
ரிசர்வ் வங்கி கவர்னரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.