ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில்  கடன் பெறாத விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் என அம்மாநில முதல்வர் அசோக் கெகலாத் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்ட பாஜகவை தோற்கடித்து  காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.    தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் வாக்களித்தபடி ஆட்சிக்கு வந்த உடன் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது.   இதன் மூலம் விவசாயிகள் அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கி இருந்த விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் துர்காபூர் மாவட்டத்தில் கடன் தள்ளுபடி செய்ததாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் பலர் கடன் வாங்கவில்லை என அறிவித்துள்ளனர்.   துர்காப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவாடி, நந்தோர், மற்றும் ஜோத்னா ஆகிய கிராமங்களில் பல விவசாயிகள் கடன் வாங்காத நிலையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதை ஒட்டி அந்த விவசாயிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.   கிராமத் தலைவர்களில் ஒருவரான ஈஸ்வர்லால் சார்போதா, “சுமார் ரூ.8 கோடி அளவில் இந்த கடன் ஊழல் நடந்துள்ளது.   நாங்க்ள் எங்கள் பகுதி மாவட்ட நீதிபதியிடம் இது குறித்து புகார் அளித்துள்ளோம்.   இவ்வாறு ஊழல் செய்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இன்ரு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெகலாத் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “இந்த கடன் அனைத்தும் பாஜக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டுள்ளன.    இவ்வளவு பெரிய ஊழல் பாஜக ஆட்சியில் நடந்துள்ளது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது.   இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  விசாரணையில் மேலும் பல ஊழல்கள் வெளிவர வாய்புள்ளது” என தெரிவித்துள்ளார்.