சிதாப்பூர் உ.பி.
கடனை திருப்பித் தர அவகாசம் கேட்ட விவசாயியை கடன் வசூலிக்க வந்தவர்கள் டிராக்டரை ஏற்றிக் கொன்றுள்ளனர்.
உத்திரப் பிரதேச மாநிலம் சிதாப்பூர் அருகில் உள்ள பௌரி கிராமத்தை சேர்ந்தவர் ஞான் சந்திரா (வயது 45). இவர் டிராக்டர் வாங்க கடந்த 2015 ஆம் வருடம் ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரை அவரு ரூ. 4 லட்சம் திருப்பி செலுத்தி உள்ளார். மீதமுள்ள தொகையை விரைவில் திருப்பி செலுத்துவதாக நிதி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
இந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மேலும் ரூ.35000 செலுத்தி உள்ளார். ஆயினும் அந்த நிதி நிறுவனம் டிராக்டரை பறிமுதல் செய்யப்படும் என அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. நேற்று முன் தினம் அந்த நிறுவனத்தின் வசூலிப்பாளர்கள் அந்த நோட்டிசுடன் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஞான் சந்திராவின் மனைவி ஞானவதி தனது கணவர் அந்த டிராக்டரை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்றுள்ளதாக கூறி உள்ளார்.
வசூலிப்பாளர்கள் அந்த வயலுக்கு சென்று உடனடியாக பாக்கித் தொகையை செலுத்த வேண்டும் எனவும் தவறினால் டிராக்டரை பறிமுதல் செய்வோம் எனக் கூறி உள்ளனர். தன்னிடம் தற்போது பணம் இல்லாததால் பாக்கித் தொகை ரூ.65000/-ஐ இந்த மாத இறுதிக்குள் செலுத்தி விடுவதாக ஞான் சந்திரா கெஞ்சி உள்ளார். அதைக் காதில் வாங்காமல் அவரைப் பிடித்துத் தள்ளி விட்டு டிராக்டரின் சாவியை அவர்கள் பிடுங்கிக் கொண்டுள்ளனர்.
ஞான் சந்திரா அவர்களை டிராக்டரை எடுத்துச் செல்லாமல் தடுக்க அந்த டிராக்டரின் முன்பக்கத்தை பிடித்துக் கொண்டு விரைவில் பணத்தை திருப்பித் தருவதாக கெஞ்சி உள்ளார். ஆனால் அவர்கள் டிராக்டரை செலுத்தத் தொடங்கவே கை நழுவி கீழே விழுந்தார். அப்போதும் அந்த வசூலிப்பாளர்கள் விடாமல் வாகனத்தை செலுத்தவே சக்கரங்களின் இடையில் சிக்கிய ஞான் சந்திரா அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதற்கும் தடை செய்தனர். அதன் பிறகு அந்த மாவட்டத்தின் மூத்த காவல் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதன் பிறகு மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
அந்த வசூலிப்பாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட உயர் அதிகாரி கூறி உள்ளார்.