லக்னோ:
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டும், தெருவில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ மாநகராட்சி திணறி வருகிறது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் எதிர்கட்சிகளை சமாளிப்பது பாஜக அரசுக்கு பெரிதாகத் தெரியவில்லை.
ஆனால் மாடுகள் மாநில அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கின்றன.
மாடுகளை இறைச்சிக்காக கொல்வதற்கு உத்திரப்பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டது. மாடுகளை பாதுகாக்க கோசாலா அமைக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இந்நிலையில், மாடுகளின் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் பெருகியது. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மேய்ந்துவரும் மாடுகளை, அரசு அலுவலக வாளகங்களில் விவசாயிகள் அடைத்தனர்.
இது அரசுக்கு தினந்தோறும் தலைவலியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தெருவில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலாவில் அடைக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.
அவர் விதித்த காலக்கெடு ஞாயிற்றுக் கிழமையுடன் முடிந்தது. ஆனால் எந்த விதப் பலனும் இல்லை. மாநிலத்தின் தலைநகரான லக்னோவிலேயே சர்வ சாதாரணமாக மாடுகள் தெருவில் சுற்றித் திரிந்தன.
லக்னோ மாநகராட்சி அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும், மாடுகளை அப்புறப்படுத்த முடியவில்லை. கொலக்கெடு முடிவடையும் இன்று, வெறும் 30 சதவீத மாடுகளை மட்டுமே கோசாலாவில் அடைத்துள்ளனர்.
மீதமுள்ள 70 சதவீத மாடுகள் இன்னும் தெருவில் சுற்றித் திரிகின்றன.
அதிகாரிகளைக் கண்டு மாடுகள் ஓட, மாட்டைக் கண்டு மக்கள் ஓட, உத்திரப் பிரதேசத்தில் தினந்தோறும் ஜல்லிக்கட்டுதான்.