டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் 6 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் பல நாடுகளில் கவனம் பெற்றுள்ளது.

காணொளி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை கூறிய கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், அவரது இந்த கருத்து தேவையற்றது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து கூறி உள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறி இருப்பதாவது: டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் தெரிவித்த கருத்துக்களை கண்டோம். ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு இது போன்று கருத்துகள் தெரிவிப்பது, தேவையற்றது என்றார்.