திருத்தணி: தமிழகஅரசு வழங்கிய பொங்கலி பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது தொடர்பாக, புகார் அளித்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை மிரட்டியதை கண்டித்து, அவரது மகன் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி நகரத்தில் சரவணப்பொய்கை திருக்குளம் அருகே உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதை பெற்ற அந்த பகுதியை சேர்ந்த சமையல் கலைஞர் நந்தன் என்பவர், அதில் உள்ள பொருட்களை திறந்த பார்த்தபோது, அதில் இருந்த புளி பார்சலில் இறந்த பல்லி கிடந்துள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த நந்தன், இதுதொடர்பாக, ரேசன் கடை ஊழியரிடம் கூறியதுடன், செய்தியாளர்களிடமும் காண்பித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திமுகவினர் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ரேசன் கடை விற்பனையாளர், குறை கூறிய நந்தன்மீதே காவல்துறையில் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, காவல்துறையினருக்கும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நந்தன்மீது, 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டியுள்ளனர்.
ஆளுங்கட்சி மற்றும் காவல்துறையினரின் மிரட்டலை கண்டித்து, நந்தனின் மகன் குப்புசாமி தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் நந்தன் அதிமுக விசுவாசி என்று கூறப்படுகிறது. இதனால், இதை அரசியல் ரீதியில் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பில் இறந்த பல்லி கிடந்ததை சுட்டிக்காட்டிய அப்பாவி நந்தன் மீது பொய் வழக்கு பதிந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரக்கோணம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், விநாயகர் கோயில் எதிரில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உண்மையை கூறியதால், கட்சியினர் மற்றும் காவல்துறையினரின் மிரட்டலால் அப்பாவி ஒருவரின் உயிர்போயுள்ளது, அந்த பகுதி மக்களிடையே கடுமையான அதிர்ச்சியையும், திமுக மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.