லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களிலேயே அவர் பதவி உள்ளது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து புதிய பிரதமர் தேர்வு வரும் 28ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆகஸ்டு மாதம் முதல்  நடைபெற்று வந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சா வழியைச்சேர்ந்தவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக்குக்கும், வெளியுறவுத்துறை செயலராக இருந்த லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தல் ஆகஸ்டு 2ந்தேதியுடன் முடிவடைந்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,  கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரிட்டன் நாட்டின் பிரதமருமான லிஸ் டிரஸ்,  பிரதமராக செப்டம்பர் 6ந்தேதி பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அவர் திடீரென இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இங்கிலாந்தில்,  லிஸ் டிரஸ் கொண்டுவந்த வரி குறைவு பிரிட்டன் பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு பிரிட்டன்  பாராளுமன்றத்தில்  அவருக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டது.  இதையடுத்து, முக்கிய மந்திரிகள் இரண்டு பேர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது பிரதமரும்  ராஜினாமா செய்துள்ளார்.   இதையடுத்து தனது தவறான பொருளாதார முடிவுகளுக்காக அவர் மன்னிப்பு கோரினார். தொடர்ந்து இன்று தனது  கட்சி தலைவர் பதவியில் இருந்தும் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். இதுதொடர்பாக பிரிட்டன் மன்னருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிஸ் டிரஸ் நாட்டின் 3வது பெண் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவராக இருந்து வந்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ் இன்று பதவியேற்பு