ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்ரேலிய அணியை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர். உஸ்மான் க்வாஜாவின் அசத்தல் சதத்தினால் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 2விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

aut

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. ஏற்கெனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது ஒரு நாள் போட்டி ரஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கெனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றதால், இந்த போட்டியில் கட்டாயம் ஆஸ்தி்ரேலிய அணி வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகிறது.

முதலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இருவரும் போட்டியின் தீவிரத்தை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் 20 ஓவர்கள் முடிவில் கவாஜா மற்றும் ஆரோன் அரைசதம் எடுக்க ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் பின்ச் 31.5வது ஓவரில் 99 பந்துகளுக்கு 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் நிலைத்து விளையாடிய கவாஜா 37வது ஓவரில் 100 ரன்கள் கடந்து சதம் அடித்தார். 38வது ஓவரில் ஷமியின் பந்து வீச்சை எதிர்க் கொண்ட கவாஜா 104 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்கள் முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

ind

போட்டி தொடங்கும் முன்பாக இன்றைய ஆட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவங்கள் நடைபெற்றன. முன்னாள் கேப்டன் தோனி சக வீரர்களுக்கு ராணுவ கேப்களை வழங்கினார். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த ராணுவ கேப் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று, இந்த போட்டியில் கிடைக்கும் சம்பளத்தை புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு அளிக்க உள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

மேலும், இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருவதால் மைதானத்தில் வண்ண பலூன்கள் பறக்க விட்டு அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை பிசிசிஐ தெரிவித்துக் கொண்டது.