பீகார்:
பீகாரில் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறந்ததற்கும், லிட்சி பழத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டத்தில் லிட்சி பழம் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களாக குழந்தைகள் தொடர்ந்து இறந்ததற்கு லிட்சி பழத்தை சாப்பிட்டதே காரணம் என கூறப்பட்டு வருகிறது.
இந்த குற்றச்சாட்டை லிட்சி தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் விஷால் நாத் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, பீகாரில் ஏராளமான குழந்தைகள் இறந்ததற்கு லிட்சிப் பழத்தை சாப்பிட்டது காரணமல்ல.
லிட்சிப் பழத்தால் மூளைக் காய்ச்சல் வருவதில்லை. இந்த பழத்தில் நச்சு இல்லை. துரதிஷ்டவசமாக லிட்சிப் பழத்தின் மீது பொதுமக்கள் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்.
முஜப்பர்பூரிலிருந்து மும்பை, டெல்லிக்கு லிட்சி பழங்கள் அனுப்பப்படுகின்றன.
அங்கெல்லாம் ஏன் மூளைக் காய்ச்சல் ஏற்படவில்லை?
லிட்சி பழம் சத்தானது. வைட்டமின் பி, கால்சியம், இரும்பு, பொட்டாஷியம், பாஸ்பரஸ் மற்றும் கனிமங்கள் உள்ளன.
எனது 11 வருட அனுபவத்தில், முஜாபர்பூர் லிட்சி பழம் ஆராய்ச்சி மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட பழங்களால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டதில்லை.
பொதுவாக லிட்சி, மாம்பழம், கொய்யா போன்ற பழங்களில் இயற்கையாகவே அமிலம் உள்ளது.
இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் ஒவ்வாமை தான் ஏற்படுமே தவிர, உயிரிழப்புகள் ஏற்படாது.
லிட்சிப் பழத்தில் வெறும் வயிற்றுடன் இரவில் சாப்பிட்டதால், சர்க்கரை அளவு குறைந்து குழந்தைகள் இறந்து போனார்கள் என்பது தவறு.
லிட்சிப் பழத்திலேயே சர்க்கரை உள்ளது.
சமூகப் பொருளாதாரம், உணவு முறை, சத்துணவு, பருவ நிலை மாற்றம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, இறந்த குழந்தைகள் வசித்த பகுதியில் சுகாதாரம் இருந்ததா? என்பது குறித்து ஆராய வேண்டும்.
ஊட்டச் சத்து இல்லாதது தான் இங்கு பெரிய பிரச்சினை. ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் நலிந்துவிடுகின்றன. அத்தகைய குழந்தைகளை எளிதில் நோய் தாக்கும்.
மூளைக் காய்ச்சல் பரவுவதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். லிட்சிப் பழத்தால் நோய் ஏற்படுகிறதா என்பது குறித்த விசாரணைக்கு அரசுடன் ஒத்துழைக்க தயாராகவே இருக்கின்றோம் என்றார்.