டில்லி:
2018ம் ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் உரையின் மூலம் தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார்.
அப்போது யுனெஸ்கோவின் சிறந்த பண்பாட்டு நகரங்களின் பட்டியலில் சென்னைக்கும், அகமதாபாத்துக்கும் இடம் கிடைத்துள்ளது என்றும், அதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும், யுனெஸ்கோவின் பாரம்பரிய இசை நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பெற்றதில் மகிழ்ச்சி என்றும், கும்பமேளா உற்சவத்திற்கு மனிதகுலத்தின் கலாசார பாரம்பரிய நிகழ்வு என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது, இது இந்தியாவுக்கு பெருமை என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய மத்திய அரசு சமூகத்தின் நலிந்த பிரிவினருக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றும், காஷ்மீர் பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் குடியரசு தலைவர் தனது உரையின்போது தெரிவித்தார்.
குடியரசு தலைவர் உரையை தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கான பொருளாதார விவரங்கள் அடங்கிய, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்தார்.