சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையவில்லை. செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ரயில் சேவைக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது.
மேலும், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.
இதை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் படி விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ. 500 அபராதம், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் உமிழ்ந்தால் ரூ. 500 அபராதம், கொரோனா விதிகளை மீறும் உடற்பயிற்சி நிலையங்கள், சலூன், ஸ்பா நிலையங்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.