திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான உரிமம் வழங்கும் சரத்து நீக்கம்
திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் திருத்தம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில்
1/2 pic.twitter.com/4EsavoyCJM— TN DIPR (@TNDIPRNEWS) April 24, 2023
இதுகுறித்து வெளியான அறிவி்ப்பில் தெரிவித்திருப்பதாவது :
வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு, தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commercial Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Convention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது.
வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.