மளமளவெனச் சரியும் லிப்ஸ்டிக் வியாபாரம்..
பெண்களும் லிப்-ஸ்டிக்கும் பிரிக்கவே முடியாத ஓர் விசயமாக இருந்து வந்த காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்.
இனி வரும் காலங்களில் பொது நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும் சூழலை எதிர்நோக்கியிருக்கிறோம் நாம். அப்படியே தவிர்க்க முடியாத திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், அலுவலக கூட்டங்கள் போன்றவை நடைபெற்றாலும் அவற்றில் பங்குபெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே இருக்கும் என்பதுடன், அப்படிப் பங்கேற்பவர்களும் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயமானதாக இருக்கும். எனவே இனி இதுபோன்ற பொது நிகழ்வுகளில் பங்கெடுக்கும் பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிடும் என்கின்றனர் மார்க்கெட் ரிசர்ச் செய்பவர்கள்.
ஏற்கெனவே கடந்த மூன்று மாதங்களாக அனைவருமே வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவி வருவதால் லிப்ஸ்டிக் விற்பனை மிக அதிகமாகவே குறைந்து விட்டதாம். எனவே இனி லிப்ஸ்டிக் தயாரிப்புக்கென பணம் முதலீடு செய்வதால் பயனில்லை என்கின்றனர் அழகுசாதன பொருட்களைத் தயாரிப்பவர்கள். இதற்குப் பதிலாக இவர்களின் பார்வை கண்கள் சம்பந்தமான மேக்அப் பொருட்களான ஐலைனர், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றின் மேல் அதிகமாக விழுந்துள்ளது.
பெரும்பாலான பெண்கள் இதனை ஒத்துக்கொண்டுள்ளனர். முகத்தில் மாஸ்க் முக்கியமாகிவிடவே, இனி இவர்களின் மேக்அப் கவனம் கண்களை நோக்கித் திரும்பியுள்ளது. இனி அழகுசாதன பொருள் விற்பனையில் லிப்ஸ்டிக்கின் இடத்தை கண் சம்பந்தமான மேக்அப் பொருட்கள் பிடித்துவிடும்.
எனினும் ஒரு சில வல்லுநர்கள் லிப்ஸ்டிக் மீண்டும் அதனுடைய இடத்தை பிடித்து விடும். அந்த நிலைமை தற்காலிகமானது தான் என்றும் கூறுகின்றனர்.
எது எப்படியோ, பல கோடிக்கணக்கான பணம் புரளும் பெண்களின் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என்பது மாத்திரம் உறுதி.
– லட்சுமி பிரியா