ஐதராபாத்
ஐதராபாத் நகரில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இந்தியாவில் தற்போது இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் தினசரி பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவில் தினசரி 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஐதராபாத் நகரில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் சுமார் 10 வயதுடைய 12 சிங்கங்கள் உள்ளன. சில சிங்கங்களிடையே பசியின்மை, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதை வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் கவனித்தனர். எனவே கடந்த 24ம் தேதி கால்நடை அதிகாரிகள் சிங்கங்களின் ஓரோபார்னீஜியல் மாதிரிகளை எடுத்துச் சோதனையிடப்பட்டது.
இதில் தலா நான்கு ஆண் மற்றும் பெண் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர். நேரு விலங்கியல் பூங்கா கண்காணிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் சித்தானந்த் குக்ரெட்டி இது குறித்துக் கூறுகையில், ‛இங்குச் சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது உண்மைதான். ஆயினும், கொரோனா பரிசோதனை அறிக்கைகளை நான் இன்னும் பெறவில்லை,’ என தெரிவித்துள்ளார்.
மேலும் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் ஷிரிஷ் உபாதி ”நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 8 புலிகள் மற்றும் சிங்கங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டன. மேலும், ஹாங்காங்கில், வளர்ப்பு பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.