தனக்கு வர வேண்டிய பணத்தை ஏமாற்றிப் பறிக்க முயற்சி செய்வதாக பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் போலீசில் புகார் செய்துள்ளார்.
வேந்தர் மூவீஸ் மதனுக்கும், மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனுக்கும் லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பணம் தர வேண்டி உள்ளது. இந்த நிலையில், ராக்லைன் வெங்கடேஷுக்கு நண்பரான சூரப்ப பாபு,  கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.  இந்த நிலையில்,  லிங்கா படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையாக மதனுக்கும் சிங்காரவேலனுக்கும் தரவேண்டிய பணத்தை என்னிடம் தாருங்கள். இல்லாவிட்டால் படத்தை வெளியிடவிடமாட்டோம், என்று பிலிம்சேம்பர் செயலாளர்களில் ஒருவரான அருள்பதி மிரட்டுவதாக தயாரிப்பாளர் சூரப்ப பாபு நேற்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
 
a
 
இந்த நிலையில் ‘எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ என்று சென்னை விருகம்பாகம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்  சிங்காரவேலன்.
அதில், “லிங்கா படத்தின் திருச்சி – தஞ்சாவூர் உரிமையை எங்கள் மெரினா பிக்சர்ஸ் பெற்றிருந்தது. இந்தப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் எங்களுக்கு சேர வேண்டிய ரூ 1 கோடியில், ரூ 47 லட்சம் முதல் கட்டமாகக் கிடைத்தது. மீதி ரூ 53 லட்சம் கிடைப்பது தாமதமானதால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்.
வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், எங்கள் அனுமதி பெறாமல், சட்ட நியாயங்களுக்குப் புறம்பாக பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை, பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி என்பவர் கட்டப்பஞ்சாயத்து பேசி மிரட்டி வருகிறார். இதனால் நாங்கள் பணத்தை இழக்கும் நிலை உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து பேசி, எங்களுக்கு வரவேண்டிய பணத்தை அபகரிக்க நினைக்கும் அருள்பதி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று கோரியுள்ளார். அருள்பதிக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார் சிங்காரவேலன்.