குருவாயூர்

வாரணாசியை போல் கேரளாவும் எனது ஊர் தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு நேற்று பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு அவர் வேட்டியுடன் சென்று பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் வைரலாகின. தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக கேரளாவுக்கு வந்த பிரதமர் மோடி கோவில் தரிசனத்துக்கு பிறகு நடந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “பாஜக தொண்டர்கள் என்றுமே மக்களின் சேவகர்களாக இருப்பார்கள், அவர்கள் ஐந்து வருடங்கள் மட்டும் அல்ல, ஆயுள் முழுவதுமே மக்களின் சேவகர்களாக விளங்குவார்கள். இந்த தேர்தலில் அவர்களின் உழைப்பை பாராட்டுகிறேன். அத்துடன் மக்கள் இந்த தேர்தலில் ஒரு திருவிழாவைப் போல் கலந்துக் கொண்டதையும் பாராட்டுகிறேன்.

இந்த தேர்தலில் எங்களை வெற்றி பெற வைத்தவர்களும் எனது மக்களே, எதிராக வாக்களித்தவர்களும் எனது மக்களே ஆவார்கள். அனைவரையும் சமமாக நடத்துவதே ஜனநாயகம் ஆகும். நான் நாட்டின் சேவகன். எனக்கு எவ்வித வேறுபாடும் கிடையாது. இந்த புனிதமான குருவாயூர் மண்ணில் நான் புதிய இந்தியாவை உருவாக்குவேன் என உறுதி அளிக்கிறேன்.

நாங்கள் மக்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பாடு பட உள்ளோம். நாங்கள் 130 கோடி இந்திய மக்களுடைய முன்னேற்றத்துக்கு தேவையனவற்றை செய்ய உள்ளோம். என்னை பொறுத்தவரை எனது தொகுதியான வாரணாசியை போல கேரளாவும் எனது ஊர் தான். சொல்லப்போனால் வாரணாசியை விட கேரளா எனக்கு அதிகம் சொந்தமானது” என கூறி உள்ளார்.