திருச்செந்தூர்
திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூர் முருகன் கோவிலும் பக்தர்களுக்கு காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு திருச்செந்தூர் கோவிலுக்குப் பல வசதிகளை செய்து வருகிறது. பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யச் செல்வோர் கூட்ட நேரத்தின் போது அமர்ந்து செல்ல காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்குச் சென்று அமர்ந்து தங்களுக்கான தரிசன நேரம் வரும் வரை காத்திருந்து பிறகு தரிசனத்துக்குச் செல்ல வேண்டும்.
தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலிலும் சாதாரண நாட்களில் தினசரி பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். திருவிழா மற்றும் விசேஷ தினங்களில் இது பல மடங்கு அதிகரிப்பது வழக்கமாகும். தற்போது திருச்செந்தூர் கோவிலில் திருப்பதி கோவிலுக்கு இணையாகப் பல வசதிகள் இந்து சமய அறநிலையத்துறையால் செய்யப்படுகிறது.
முதல் கட்டமாக திருச்செந்தூர் கோவிலில் பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் அமர்ந்து செல்ல வசதியாகக் காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கைகள், எல் இ டி டிவி, மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகம் பக்தர்கள் வரும் வேளையில் இந்த அறையில் அமர்ந்து பிறகு குழுவாகத் தரிசனத்துக்கு அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டம் இல்லாததால் இன்று திறக்கப்பட்ட இந்த அறை வெறிச்சோடி காணப்பட்டது.