வாஷிடங்டன்:

இந்தியாவை பின்பற்றி  மற்ற நாடுகளும் ஆதாரை உலக நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும்  அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. ஆதார் அட்டைகளில் அவரவர்  புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று  உள்ளன.

வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம் கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, அந்த அட்டைதாரரை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் நிலவுகிறது.

ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டை முறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்ததாவது:

இந்தியாவில் செயல்படுத்தப்படும் ஆதார் அட்டையால் நன்மைகள் அதிகம்.  அனைத்து நாடுகளும் இதனைப் பயன்படுத்தி சிறப்பான அரசு சேவைகளை அளிக்க முடியும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தும்.   அதற்காக உலக வங்கிக்கு எங்கள் நிறுவனம் நிதி அளித்துள்ளது.

ஆதாரில் எந்த ஒரு தனியுறிமை சிக்கலும் இல்லை. இதனை உலக வங்கி எல்லா நாடுகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக  மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதி அளிக்கும்.  அது மட்டும் இல்லாமல் இந்த ஆதார் சேவையினை அறிமுகம் செய்துள்ள நந்தன் நீலகேனியையும் உலக வங்கி தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஆதார் தரவு தளம் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அதார் தரவுகளை யாராலும் திருட முடியாது, பையோமெட்ரிக் சரிபார்ப்பு இல்லாமல் மோசடி சாத்தியம் இல்லை,  வங்கி சேவைகளுக்காக இதனைப் பயன்படுத்தும் போது எந்தச் சிக்கலும் இதில் வர வாய்ப்பு இல்லை.

நான் நந்தன் நீலக்கனியின் நல்ல நண்பன் அவர் எடுத்துள்ள முயற்சிகள் டிஜிட்டல் உதவியுடன் கல்விக்கு உதவக் கூடியதாகவும் இருக்கும்.

ஆதார் முறையை வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட எந்த நாடுகளும் இதற்கு முன்னர் பயன்படுத்தியது கிடையாது” என்று  பில்கேட்ஸ் கூறினார்.

2016-ம் ஆண்டு ஆதார் குறித்து நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்து ஒரு கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பில்கேட்ஸ், எந்த ஒரு நாட்டு அரசும் எடுத்திராத ஒரு  சிறப்பான முயற்சி இது என்று பாராட்டி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.