சென்னை: தமிழக தலைநகரின் பல இடங்களில் செயல்படும் உணவு தொடர் அமைப்பான முருகன் இட்லி கடை என்ற உணவகத்தின் மத்திய அடுப்பறைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்துள்ளது தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு துறை.
அடுப்பறையானது சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்படும் இந்த உணவகத் தொடரின் மத்திய அடுப்பறையிலிருந்து மொத்தம் 23 கிளைகளுக்கு உணவு சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், இந்த உணவகத் தொடரின் ஒரு கிளையில் உணவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்ததையடுத்து, 50 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் மத்திய உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த மோசமான குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அதை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் அளித்தனர். ஆனால், குறைகள் நிவர்த்தி செய்யப்படாததால் விளக்கக் கேட்பு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதுவும் கண்டுகெள்ளப்படாததால், அந்த அடுப்பறையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்து சீல் வைத்துள்ளனர்.
அந்த உணவக நிர்வாகம் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திசெய்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து உணவுப் பாதுகாப்பு துறையில் முறையிட்டு நிவாரணம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.