டில்லி
டில்லியில் சாலைக் குற்றங்கள் காரணமாக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுனர் உரிமங்களில் பல காணாமல் போய் உள்ளன.
சாலையில் சிக்னலை கவனிக்காமல் வாகனம் செலுத்துவது, அதிக வேகம், வாகனம் செலுத்தும் போது மொபைலில் பேசுவது, குடித்துவிட்டு வாகனம் செலுத்துவது ஆகிய குற்றங்களுக்காக உரிமத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்கின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இந்த உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முடக்கப் படுகின்றன. அந்தக் காலம் முடிந்த பின் போக்குவரத்து அலுவலகங்களில் அதை பெற்றுக் கொள்ள முடியும்.
தலைநகர் டில்லியில் இது போல சுமார் ஐந்து லட்சம் பேருடைய உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காலக் கெடு முடிந்த பின் அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களை அணுகிய போது பலருடைய உரிமங்கள் அங்கு இல்லை. விசாரித்த போது அவைகள் காவல் நிலைங்களில் காணாமல் போய் விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களுடைய உரிமம் திரும்பக் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர்.
ஒரு சிலர் வேறு வழியில்லாமல் புதிய உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே உரிமம் பெற்றவர்களுக்கு மீண்டும் உரிமம் தர முடியாது என போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது. காவல் துறையினரிடம் இருந்து இந்த உரிமங்கள் காணாமல் போனதாக எந்த ஒரு தகவலும் வராததால் இவர்களால் டூப்ளிகேட் உரிமமும் பெற முடிவதில்லை. காவல் துறையினர் காணாமல் போன உரிமங்களை விரைவில் தேடித் தருவதாக வாய்மொழியாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து ஒரு சிலர் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். நீதிமன்றம் இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி பறி முதல் செய்யப்பட்ட உரிமங்களை பத்திரமாக வைத்துக் கொள்வது காவல்துறையினரின் கடமை ஆகும். அவர்களுக்கு அபராதம் அல்லது காலக்கெடு முடிந்த பின் உரிமங்கள் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா போன்ற ஒரு சில மாநிலங்களில் உரிமம் பறிமுதல் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக குறிப்பிட்ட காலம் வரை செல்லாது என அந்த உரிமத்தில் எழுதிக் கொடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த தகவல் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் அறிவிக்கப் பட்டு விடுகிறது.
இதே நிலை தலைநகர் டில்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப் பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.