கடித நாள் (செப்டம்பர் 1)

முகவரிகளை தொலைத்த பின்,
முகங்களை மறந்த
பின் ஏது கடிதம்?

கூடி வாழும் வாழ்க்கை
கூடு வாழ்க்கையான
பின்னே ஏது உறவு?

அன்புள்ள
உறவுகளை
எழுத்தால் இணைத்த
உறவு சங்கிலி
எங்கோ பிரிந்து சென்ற மாயமென்ன?

சுற்றத்தின் நலத்தை
கட்டுகளின் குவியலுள் தேடும்
காலம் எங்கோ
காணாமல் சென்றதேன்?

எழுத்தாணி முனை
அவதானித்த வாழ்வியல் காலம்,,
எப்போதோ படித்த
இலக்கியத்தின்
இறுதி பக்கமாய்
முடிவுற்றது ஏனோ?

வேளையிலும்,
வேலையிலும்
வரவிலும்,செலவிலும்
உடன் வந்த அட்டை
எங்கே?

கடிதத்தை காட்சியாக்கும்
அருங்காட்சியகம்
இருக்கிறதா??
அங்கொரு அரங்கம் தாருங்கள்….
எங்கள் கடிதங்களை
அங்கே வைத்திட!!

காதலின் பிணைப்பு
கடிதத்தில் கூறிய
வார்த்தையில் இன்றும் வாழ்கிறது….
ஈடாகாது எந்த. காவியமும்…காதல்
கடிதத்தின் முன்னே!

அனுப்புநர் முகவரி
வரை கூட, இடம்
போதாமல் எழுதிய
பாச உறவில்
பெற்றவர்களை பார்த்த காலமது!

செந்நிற பெட்டிகளிள்
சேர்ந்து நின்ற
உறவு பாலங்களை
இனி காலங்களால்
மீட்டெடுக்க முடியுமா?

ஆகாயத்தில் பறந்து
அயல் நாட்டிலும்
அன்பை தூவிய
அந்த தூது கடுதாசி
எங்கே இன்று?

நவீன செல்பேசியில்
நாளும் செய்திகள்…
நெஞ்சில் ஒட்டவில்லை….

பச்சை பொத்தானை
இயக்கும் கைகள்
பேனா பிடிக்குமா?….
அன்புள்ள…..என
ஆரம்பிக்கும்…வரிகளை இனி காணுமா
இந்த உலகம்?

பா. தேவிமயில் குமார்