டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்ணட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் என ஊழலில் ஈடுபட்ட எந்த ஒரு தலைவரையும் சிறையில் தள்ளுவோம் என பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார். அவரது ஆணவத்தமான பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்மீது அமலாக்கத்துறை மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. அவர் ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுபோல, ஜார்க்ண்ட மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், அவரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, ‘‘டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் சம்மன்களை ஏற்று விசாரணையை சந்திக்காமல் தவிர்த்து வருகின்றனர். கெஜ்ரிவால் ஆனாலும், சோரனாக இருந்தாலும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் நாட்டின் மிக நேர்மையான மக்களை ஆட்சி செய்து வந்த காலம் மலையேறி விட்டது. ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின்படி சிறை கம்பிகளுக்கு பின்னால் தான் அடைக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு நாங்கள் இருக்கிறோம்.
தன் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றால், கெஜ்ரிவால் ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை. இது போன்ற நாடகங்கள் இனி எடுபடாது. தனக்கு கை விலங்கு மாட்டப்படுவது நெருங்கி வருவதை அவரும் உணர்ந்துள்ளார் என்று கூறினார்.
பாஜக செய்தி தொடர்பாளரின் இந்த மிரட்டல் பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.