கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், அதை அடியோடு ஒழிக்க பாடுபடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
மத வேறுபாடற்ற ஒரு நாட்டை துவேசத்தால் துண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அதுவும் கொரானாவின் ருத்ர தாண்டவத்தில் துவண்டு போய்க் கிடக்கும் இந்நேரத்திலும் இந்த துவேசம் எவ்வளவு கேவலமானவர்களை பிரிவினைவாத மத சக்திகள் விதைத்துக் கொண்டிருக்கிறது?!
டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தலிபான்களுக்கு இணையானவர்கள் என்றெல்லாம் பேசிப் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர்.
பிப்ரவரியில் கொரனா சைனாவைத் தீண்டிக் கொண்டிருந்த நேரம் .. நாம் நம்ம நாட்டுக்கெல்லாம் வராது என நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிந்த நேரம்…
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்து கூட்டம் கூட்டமா சுற்றிய நேரம்… ஈஷா மையத்தில் காஜல் அகர்வால் பல ஆயிரம் மக்களுக்கு நடுவே நடனமாடிய நேரம்…
தினமும் பல்லாயிரக் கணக்கானோர் பல நாடுகளிலிருந்து வந்து போய்க்கொண்டிருந்த நேரம்
முஸ்லிம்கள் சந்திக்கும் கூட்டமும் நடந்துவிட்டது.
மற்ற எந்த சந்திப்புகளும் நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லையாம். முஸ்லிம்கள் மட்டும்தான் கொரானா பரப்பவே மீட்டிங் போட்டார்களாம்…
ஏன்டா கொஞ்சமாவது அறிவிருக்கா?
ஆரம்பத்தில் கொரானாவின் பாதிப்பு பற்றி அனா ஆவண்ணா தெரியாம பங்கேற்றதை இப்படி திரிக்கிறீங்களேடா… ??
அதுவும், கொரானாவை ஏற்றிக் கொண்டு பரப்பி அப்படியே பிற மதத்தினரையெல்லாம் காலி பண்ணப் போறாங்களாம்.
உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையாய்யா… ?
கொரானாவை ஏற்றிக்கொள்ளும் ஒருவன் முதலில் தான் தான் சவான் என்பது தெரியாதா??
அப்புறம்தானே அவன் மற்றவர்களுக்கு அந்த நோயைப் பரப்புவதைப் பற்றி யோசிப்பான்??
சரி… அவன் தான் சாவதைப் பற்றி கவலை கொள்ளாதவன் என்றே வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவன் முதலில் டெல்லியிலிருந்து திரும்பியதும் நேராக மற்ற மதத்தினர் இருக்கும் பகுதிகளுக்கா பார்த்து சென்று அங்கு பரப்பும் வேலை செய்திருக்கணும்??.
டெல்லியிலிருந்து வந்தவர்கள் நேரடியாக தங்கள் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவன் மனைவி பிள்ளைகள் .. சொந்த பந்தம் எல்லாம் இருந்திருக்குமே…
அவர்களுக்குப் பரப்பவா அவன் ஏரியாவிற்குப் போனான்?? தீவிரவாதியாகவே இருந்தாலும் தன் குழந்தைகளைப் பலிகொடுக்கமாட்டான்.
சுற்றம் சொந்தங்களை நோயிலிட மாட்டான்.
சுற்றியிருக்கும் அவன் மொத்த சமூகமும் தானே பாதிக்கப்படும்?எப்படி அவர்கள் இதை பரப்ப முயன்றிருப்பார்கள்??
கிருமிக்கு சொந்த பந்தம் முஸ்லிம்… இந்து கிறிஸ்தவன் தெரியாது… பணக்காரன் ஏழை தெரியாது.
உலகமே அரண்டு போய்க் கிடக்கு. அதிகபட்ச பாதிப்பு காஷ்மீரில்தான் நடந்திருக்கு. அங்கெல்லாம் நம் தீவிர இந்துத்துவ சக்திகள் சென்று பரப்பிவிட்டதாகச் சொல்லலாமா??
புரிந்துகொள்ளுங்கள். கொரானா நாட்களில் … மனிதனுக்கு மதம் சாதி எதுவுமே உயிர் பிழைக்க உதவவில்லை.. அதனால் எந்தப் பயனும் கிடையாது என்று நிரூபிக்கப்பட்டிருக்கு. டாக்டரும்.. செவிலியர்களும்.. தூய்மைப் பணியாளர்களும்தான் கடவுளின் அவதாரங்களாகியுள்ளனர்.
அப்பா அம்மா பெத்தப் பிள்ளை பக்கம் போக முடியலை.
மதங்களாலும் கோவில்களாலும் காப்பாற்ற முடியலை.
அறிவியல் மருத்துவம் செயல் இழந்து கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.
இது எங்கே நிரந்தரமாகிவிடுமோ என்ற பயம் மதத்தை வைத்துப் பிழைப்பு அரசியல் நடத்துபவர்களுக்குப் பயம். அதனால் அதை இப்படிக் கிளப்பிவிட்டு நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஒற்றுமையின் தேவையையும், மனித வாழ்க்கையின் நிலையாமையையும் புரிந்து கொள்ளுங்கள்.
சைனாவில் கொரானா எனக் கேள்விப்பட்டதும்… விமான நிலையங்களை சீல் வைத்திருந்தால்… வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தடுத்திருந்தால்…
இத்தனை கோரத் தனிமையையும் பொருளாதார இழப்பையும் இந்நாடு சந்தித்திருக்காது என்பது மட்டும் மறைக்க முடியாத உண்மை.
இதை செயல்படுத்தாமல் மத்திய அரசு செயல் இழந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
அதேபோல் டெல்லியில் சந்திப்பில் கலந்துகொண்ட சகோதரர்கள் முன்வந்து தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக இதைச் செய்வதால் மட்டுமே பிரிவினைவாதிகளின் வாயை அடைக்க முடியும். சகோதரர்களும்.. அமைப்பைச் சார்ந்தவர்களும் உடனடியாக இந்த பரிசோதனைக்கு முன்னெடுக்க வேண்டும்.
அவப்பெயர் ஏற்படுத்தி பிரிவினையில் முக்குளிக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலாக இருக்க முடியும்.
அருமையாக செயல்படும் நம் தமிழக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சிலர் இந்த மாதிரி துவேசத்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்..
நம் முதல்வர் இப்படிப்பட்டவர்களின் வாயை இரும்புக் கரம் கொண்டு அடைக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்…
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு”.
– சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்.