கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  சிறந்த தலைவர் என்றும் கூறினார்.

நாடு முழுவதும் இறுதி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.  மம்தா பானர்ஜி கட்சி வேட்பாளரை ஆதரித்து மேற்கு வங்க மாநிலம் ஹால்டியாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  பிரதமர் மோடி எந்த சாதனையையும் செய்யவில்லை. அதனாலேயே அவர் புல்வாமா தாக்குதல் பற்றியும், பாலகோட் வான் தாக்குதல் பற்றியும் பேசி வருகிறார். அவர் சாதனையை பேச முடியாததால், எதிர்க்கட்சி தலைவர்களை திட்டியும், குற்றம்சாட்டியும் பேசி வருகிறார். அவர் தற்போது  வலுவிழந்து இருப்பதையும், நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதையும் அவரது பிரசார கூட்டங்களுக்கு சென்றால் காணலாம் என்று கூறினார்.

மேலும்,  பிராந்திய கட்சிகள் இணைந்து அரசு அமைப்பதில் கட்சிகளிடையே எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று கூறியவர், கட்டுப்பாடுகள் ஒற்றுமையை குலைத்துவிடும். அரசு அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் 272 வேண்டும். தேர்தல் முடிவுக்கு பின்னர் நாங்கள் அனைவரும் இணைந்து நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் (பிரதமர் பதவி) ஒருமித்த கருத்தை எடுப்போம் என்று தெரிவித்தவர், 1996-ம் ஆண்டு காங்கிரஸ் இல்லாமல் ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தோம்.

ஆனால் அது தோல்வியில் முடிந்தது. காங்கிரஸ் கட்சியை வெளியில் வைத்ததால் பின்னர் அக்கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டது. எனவே மிகவும் நிலையான ஒரு அரசை அமைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிப்போம். பிரதமர் குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது. தேர்தல் முடிவில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். அதன்பின்னரே நாங்கள் அமர்ந்து பேசி ஒரு முடிவு எடுப்போம்.

ராகுல் காந்தி சிறந்த தலைவர். மோடி போல் இல்லாமல் அவருக்கு நாட்டின் நலனில் அக்கறை இருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய நாயுடு. மோடி யார் சொல்வதையும் கேட்பதில்லை, மற்றவர்களை மிரட்டியே ஆட்சி செய்ய நினைக்கிறார். சந்திரசேகர ராவ் ஒரு கட்சி (காங்கிரஸ்) வெளியில் இருந்து ஆதரவு தரும் என்று கருதி சில முயற்சியில் இறங்கி உள்ளனர். ஆனால் யாரும் ஆதரவை நீட்டிக்க விரும்பாவிட்டால் என்ன ஆகும்?

கூட்டணி ஆட்சியையும் பார்த்துவிட்டோம், மோடி தலைமையில் பெரும்பான்மை ஆட்சியையும் பார்த்துவிட்டோம்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.