சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலின்போது, திமுகவின் சாதாரணஎ தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், முதலில் பிரச்சினையை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி போன்றோர்மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோவிலுக்கு சென்ற இந்துக்கள் சிலர்மீது வழக்குகள் பதிவு செய்துள்ளதை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை கொளத்தூரில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு துர்கா ஸ்டாலினால் தொடங்கப்பட்டுள்ள ‘அமுதக் கரங்கள்’ திட்ட விழாவில் கலந்துகொண்டவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திருக்கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு ஆண்டிற்கு ரூ.112 கோடி செலவாகிறது. இதன்மூலம், 3.50 கோடி பேர் பயனடைகின்றனர். கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், நாளுக்கு நாள் கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும் மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது, அண்ணாமலை போன்றோருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பாமல் இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், எங்கள் இயக்கம், அடிக்க அடிக்க உயரும் பந்து. தீட்ட தீட்ட பட்டை தரும் வைரம் இது. காய்ச்ச காய்ச்ச மெருகேற்றும் சொக்க தங்கம் இது. அதனால் அவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும். எங்கள் இயக்க தொண்டர்கள் இன்னும் வீருநடைபோட்டுக்கொண்டே இருப்பார்கள்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம். களத்திற்கு வரச்சொல்லுங்கள். 2026 தேர்தலில் திமுகவின் அடிமட்ட தொண்டனை வைத்து அவரை தோற்கடிப்போம்.
இவ்வாறு கூறினார்.