நெட்டிசன் ஸ்டான்லி ராஜன் பதிவு
இந்திரா காந்தியினை நினைவு கூறும் இந்நாளில் அந்த மாமனிதரையும் நினைவு கூறத்தான் வேண்டும். சுதந்திர இந்தியாவினை ஒரே இந்தியா ஆக்கிய அரும் மனிதர் அவர்.
சர்தார் வல்லபாய் பட்டேல்
காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர்.
காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது பிரிட்டிஷ் அரசாங்கம். விளைச்சல் இல்லை என சொன்ன விவசாயிகள் கதறல் அவர்களுக்கு கேட்கவில்லை, நிலத்தை ஜப்தி செய்ய வந்தார்கள், இங்குதான் பட்டேல் போராட வந்தார், அது வெற்றியும் ஆயிற்று
அதனை வாழ்த்த வந்த காந்திஜி கொடுத்ததுதான் சர்தார் பட்டம், சர்தார் என்றால் தலைவர் என பொருள். அதன் பின் காந்தி பட்டேல் நட்பு வலுபெற்றது. காந்தியின் எல்லா போராட்டங்களிலும் பட்டேல் இருந்தார், எல்லா மாநாடுகளிலும் அவரோடு கலந்துகொண்டார், பல சிறைகளில் அடைக்கபட்டாலும் காந்தியோடு கலந்திருந்தார்
எரவாடா சிறையில் காந்தியினை மிக நன்றாக கவனித்துகொண்டவர் பட்டேல்
ஒருவழியாக சுதந்திரம் கிடைக்கும் காலம் நெருங்கிற்று, இந்திய வரலாற்றின் துரதிருஷ்டம், சுதந்திரம் பெற போராடியதை விட, பெற்றபின்புதான் சவால் அதிகம் இருந்தது
முதல் சிக்கல் அந்த ஜின்னா வடிவில் வந்தது, நேரடி நடவடிக்கை என அந்த ஜின்னா பொறுப்பே இல்லாமல் பாய, இந்தியாவில் ரத்த ஆறு ஓடிற்று. காந்தியின் பேச்சினை கொஞ்சமும் மதிக்காமல் தேசத்தை பிரித்துகொண்டு ஓடினார் ஜின்னா. காந்தி மனமொடிந்து இருக்க , நேரு அவர்களும் சகோதரரே எனும் மிகபெருந்தன்மையில் இருக்க, பட்டேலின் முன்னிலையிலே இத்தேசம் பிரிக்கபட்டது
காந்தி என்னமோ சொல்லி அழுதுகொண்டிருக்க, மிக தைரியமாக தன் அதிரடி கருத்தை இப்படி சொன்னார் பட்டேல்
“உடலில் வளர்ந்துவிட்ட கட்டி மற்ற உறுப்புகளை தாக்குமுன் அப்புறபடுத்தபடுவது போல, இத்தேசத்திற்கு வந்த ஆபத்தை வெட்டி எறிந்துவிட்டோம், இனி இத்தேசம் தன் வழியில் வளர்ச்சி நோக்கி செல்லட்டும்”
ஆம், அடம்பிடித்த ஜின்னாவினை இங்கே வைத்துகொண்டு சதா காலமும் சர்ச்சையினை வளர்ப்பதை விட, சனியனை அடித்து விரட்டுவது சரி என ஆணித்தரமாக சொன்னார் பட்டேல்
காந்தி பட்டேல் மோதல் தொடங்கியது, பட்டேல் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி எனும் சர்ச்சை எல்லாம் வந்தது, கொஞ்சமும அசரவில்லை பட்டேல்
காங்கிரசுக்கும், நாட்டின் பிரதமர் பதவிக்கும் ஒருவரே இருக்கவேண்டும் என்றார் காந்தி, ஆனால் காங்கிரஸ் பட்டேலின் கையில்தான் இருந்தது, அவருக்குத்தான் கட்சி ஆதரவு இருந்தது, நினைத்தால் நொடியில் பட்டேல் பிரதமராகியிருக்க நேரமது. ஆனால் விட்டுகொடுத்தார் பட்டேல், உள்துறை மற்றும் ராணுவ அமைச்சர் ஆனார். காந்தியின் சொல்லுக்கு வழிவிட்டார் பட்டேல். பாராட்டவேண்டிய குணம் அது.
இப்பொழுதும் காந்தி திருந்தியபாடில்லை, பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய 55 கோடி ரூபாயினை கொடுக்க சொன்னார், பட்டேல் மறுத்தார். அவர்கள் வெறிபிடித்த நிலையில் இருக்கின்றார்கள், இதனை கொடுத்தால் நம்மீதுதான் பாய்வார்கள், இது கொடுக்க வேண்டிய நேரம் அல்ல என மறுத்தார். உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி, இறுதியில் காந்தியின் பிடிவாதம் வென்றது, பட்டேலுக்கு மனம் சோர்ந்தது
ஆனால் குஜராத்தின் ஜூனாகத் சர்ச்சையில் அவர் கவனம் செலுத்தினார். அங்கு இஸ்லாமிய மன்னன் இருந்தான் அவன் பாகிஸ்தானோடு இணைய விரும்பினான், மக்களோ இந்தியாவோடு இணைய விரும்பினர். பெரும் குழப்பம் ஏற்பட்டது, இறுதியில் பொது வாக்கெடுப்பில் மக்கள் தேர்வு இந்தியா என முடிந்தது, பாகிஸ்தானுக்கு பெரும் அவமானம் ஆயிற்று. ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது, இதற்கு பெரும் காரணம் பட்டேல்
இங்கு சறுக்கிய பாகிஸ்தான் காஷ்மீரில் தேர்தல் என்றாலும் அம்மக்கள் மனம் இந்தியாவிற்குத்தான் செல்லும் என உணர்ந்தது, காரணம் மதவாத பாகிஸ்தானை இஸ்லாமியரில் பலரே விரும்பவில்லை, சோஷலிச இந்தியா, காந்தியும் நேருவும் வாழும் இந்தியா அவர்கள் விருப்பமானது
இதற்கு அஞ்சிய பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தது, மன்னன் ஹரிசிங் முதலில் இந்திய உதவியினை கோரவில்லை என்றாலும் பின் இறங்கி வந்தார், இந்தியா காஷ்மீரை மீட்டுதரவேண்டும் என்றார்
இந்தியாவோடு இணைய சம்மதம் என்றால் தயார் என சொன்னது இந்தியா, இந்தியா என்றால் பட்டேல், போரில் பாதி காஷ்மீர் இந்தியா வசம் ஆயிற்று, மன்னரும் கையெழுத்திட்டார்
பட்டேல் உறுதியாக சொன்னார், இதோ மன்னரின் ஒப்பந்தம் அதாவது முழு காஷ்மீரும் மன்னருடையது. மன்னர் இந்தியாவிற்கு தந்துவிட்டார், ஆக பாகிஸ்தான் தான் பாதி காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது. நியாய நம்பக்கம் இருக்கின்றது, போர் மூலம் அதனை மீட்கலாம் என வாதிட்டார்
நேருவோ அமைதி பேர்வழி, பாகிஸ்தானிய சகோதரனிடம் பாதி காஷ்மீர் இருப்பதில் என்ன தவறு என்பது போல பேசிவிட்டு போருக்கு சம்மதிக்கவில்லை
ஐ.நா அது இது என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார்.
“மிக பெரும் தவறு செய்கின்றீர்கள் நேரு, இது பிற்காலத்தில் தீரா தலைவலி கொடுக்கும்” என்ற பட்டேலின் எச்சரிக்கையினை புறக்கணித்தார் நேரு.
மனம் நொந்த பட்டேல் காந்தியினை சந்தித்து தான் அரசியலிலிருந்தும், உள்துறை அமைச்சர் பதவியிலும் இருந்தும் விலகுவதாக சொன்னார், காந்தி இதுபற்றி அடுத்தமாதம் பேசலாம் என சொல்லி சமாதான படுத்தினார்
காந்தியினை உயிரோடு சந்தித்த கடைசி பிரபலம் பட்டேல்தான்
கடும் அதிருப்தியில் சில இந்துக்கள் இருந்தபோது 1948 ஜனவரி 20ம் தேதி காந்தி மீது குண்டு வீசபட்டது , தப்பினார் காந்தி, அந்த குண்டை வீசிய மதனாலால் எனும் அகதியினை பிடித்து விசாரித்தார்கள், ஆனால் காந்தியினை கொல்ல பல குழுக்கள் அலைந்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை
அடுத்தம் 10ம் நாள் காந்தி கோட்சேவால் கொல்லபட்டார்
பழி எங்கு விழுதது என்றால் பட்டேல் மீது விழுந்தது, ஆம் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை பட்டேல் கட்டுபடுத்தவில்லை, அவர்களுக்கு சாதகமாக நடந்தார். அவர்தான் கொலைக்கு பொறுப்பு என்றெல்லாம் கடும் குற்றம் சாட்டபட்டன
மனம் நொந்தார் பட்டேல், பாகிஸ்தான் மதவெறியில் பிரிந்தது போல இந்தியாவிலும் எறியும் மதவெறி அவருக்கு வேதனை கொடுத்தது
காந்தியின் கொலை அவர் மனதை பெரிதும் பாதித்தது , ஆனால் எந்த உணர்ச்சியும் வெளிகாட்டா இரும்பு மனிதர் அவர் அதனையும் காட்டிகொள்ளவில்லை
அடுத்து அவர் உயிரோடு இருந்தது 2 வருடங்களே
அந்த 2 வருடத்தில் பட்டேல் செய்ததுதான் உச்சபட்ச சாதனை
ஆம் 527 சமஸ்தானமாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா, வெள்ளையன் வெளியேறியதும் பல தாங்கள் சுதந்திர நாடு என அறிவித்தன. அதில் ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது, இன்னும் ஏராளமான பகுதிகள் குதித்தன
அவற்றை எல்லாம் இந்தியாவோடு சேர்த்தார், பேச வேண்டிய இடங்களில் பேசினார், மிரட்ட வேண்டிய இடங்களில் மிரட்டினார், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தார்
பெரும் தொல்லை கொடுத்தது ஐதராபத் சமஸ்தானம், அதன் மன்னர் இணைய மறுத்தார், போருக்கு தயார் என்றார், பாகிஸ்தான் உதவிக்கு வரும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது
அவருக்கு ஆதரவாக மேற்கு பாகிஸ்தான், கிழக்குபாகிஸ்தான் போல தெற்கில் ஒரு பாகிஸ்தான் வேண்டும் என்ற குரல்களும் எழும்பின
ஒருவித பரபரப்பு தொற்றிகொண்ட நேரமது, ஆனால் இந்திய படைகளுக்கு முழு உரிமை கொடுத்தார் பட்டேல் , போரில் சில அழிவுகளுடன் ஐதரபாத் இந்தியாவோடு இணைந்தது
தெற்கு பாகிஸ்தான் எனும் விஷ வித்து அன்றே பிடுங்கி தூர எறியபட்டது
இன்று நாம் காணும் சுதந்திர இந்தியாவின் முழு வடிவம் பட்டேல் எனும் இரும்பு மனிதன் கொடுத்தது
நேருவுக்கு ஏகபட்ட நல்ல குணங்கள் இருந்தாலும், பட்டேல் என்ற மாமனிதன் இல்லையென்றால் இத்தேசம் இந்த வடிவம் பெற்றிருக்குமா? என்பது சந்தேகம்
காரணம் நேரு பெருந்தன்மையான போக்கு கொண்டவர், அது தேசத்திற்கு சில பாதகங்களை கொண்டுவரத்தான் செய்யும், கொண்டு வந்தது
சீன யுத்தமே நேருவுக்கு உண்மையினை கற்று கொடுத்தது
பட்டேல் கொடுத்த எச்சரிக்கையிலேதான் போர்ச்சுகலின் கோவா, பிரான்சின் பாண்டிச்சேரி ஆகியவை பின்னாளில் நமக்கு கிடைத்தன, அதனை காண அவர் உயிரோடு இல்லை
ஆனால் அவர் இந்த அளவு அடித்து நொறுக்கி இந்தியாவினை ஒன்று சேர்க்கவில்லை என்றால் இந்த இணைப்புகள் இன்னும் தாமதமாகியிருக்கும்
ஆய்வாளர்கள் சொன்னபடி இந்தியாவின் பிரதமராக பட்டேல்தான் வந்திருக்க வேண்டும், அவர் இருந்திருந்தால் காஷ்மீர் உள்ளிட்ட பெரும் சிக்கல்கள் முளைத்தே இருக்காது
ஜூனாகத், ஐதராபாத் போல காஷ்மீரும் இன்று அமைதியாக இந்தியாவோடு இருந்திருக்கும்
பட்டேலின் நாட்டுபற்றும், அவரின் தியாக வாழ்வும் நெருப்பு போன்றது. அதில் ஒரு குறை சொல்ல முடியாது
நெருப்பில் ஏது மாசு?
நாட்டுபற்று மிக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது, காஷ்மீர் போரின் பொழுது நாட்டுபற்றை பேசிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்திருந்தது
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது அகதிகளாய் ஓடிவந்தவர்களுக்கு முகாம் அமைத்து உதவிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்தது
இது நாட்டுபற்று மிக்க எல்லோருக்கும் வரும் உணர்வு, பட்டேலுக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை, வராவிட்டால்தான் ஆச்சரியம்
ஆனால் காந்தி கொலைக்குபின் அவர் பார்வை மாறுபட்டது, அதன்பின் அவர் தீரா போராட்டம், உழைப்பு என பரபரப்பாக தேசத்திற்கு வடிவம் கொடுத்து கொண்டிருந்தார், ஆர்.எஸ்.எஸ் பக்கம் எல்லாம் செல்லவில்லை
இந்த நாட்டின் உண்மையான பாதுகாவலர்கள் ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் என நம்பினார் பட்டேல், அவர்கள் பணி அரசியல்வாதிகள் குறுக்கிடாமல் நடந்தால் ஒழிய இத்தேசம் நன்றாக இயங்காது என்பது அவரின் கொள்கை
அது மகா உண்மையானதும் கூட
இத்தேசத்தின் உண்மையான சவால் சுதந்திரத்திற்கு பின்பே இருந்தது, இத்தேசம் இரண்டல்ல இரண்டாயிரம் துண்டாக உடையும் என உலகம் நம்பிகொண்டிருந்தது
அதனை எல்லாம் பொய்யாக்கி, இந்த மாபெரும் தேசத்தை அமைத்து கொடுத்த அந்த மாபெரும் மனிதனுக்கு இன்று பிறந்த நாள்
பிரதமராகும் வாய்பிருந்தும் கொஞ்சமும் சுயநலமின்றி உள்துறையில்தான் இத்தேசத்தை காக்கும் வாய்ப்பு உண்டு என சொல்லி ஏற்று அதனை சாதித்தும் காட்டியம் மாமனிதர் பட்டேல்
இத்தேசத்தின் சர்தார் எனும் சொல்லுக்கு மிக பொருத்தமானவர் அவர். ஆம் இத்தேசத்தின் தலைவன் அவரே தான்.
இத்தேசம் காலம் தந்த அந்த மாமனிதனை அவர் பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குகின்றது