தஞ்சாவூர்: ‘பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்’ என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இரண்டுநாள் பயணமாக தஞ்சை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று பிற்பகல் திருச்சி கல்லணையில் இருந்து பசானத்துக்கு தண்ணிர் திறந்துவிட்டார். முன்னதாக, கல்லணையில் உள்ள காவிரி அன்னை, அகத்தியர், கரிகாலச்சோழன், சர் ஆர்தர் காட்டன் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஆஞ்சநேயர் மற்றும் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மங்கல வாத்தியம் முழங்க முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார்.
கல்லணையில் இருந்து, பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆறுகளில் திறக்கப்பட்டன. , முதல் கட்டமாக காவிரியில் 1,500 கன அடி, வெண்ணாறு 1,000 கன அடி, கல்லணை கால்வாய் 500 கன அடி, கொள்ளிடம் 400 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் தளாடியில், 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ், ராஜா, மெய்யநாதன், எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து மாவட்ட கலெக்டர்கள், விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி” எனப் பட்டினப்பாலை பாடும் கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது.
பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.
உழவர் பெருமக்கள் வளம் காணட்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.