பெங்களூரு: வேட்டை விலங்குகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 90% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதிகள், சிவாலிக் மலைகள் மற்றும் வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கைச் சமவெளி ஆகிய இடங்களில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.
பெங்களூருவின் வன உயிரினக் கல்வி மையம், டேராடூனின் இந்திய வன உயிரின கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் உள்ள சிறுத்தைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டன.
இந்த ஆய்வில், சிறுத்தைகளின் கழிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு தொழில்நுட்பங்கள் மூலமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மரபணுசார் ஆய்வு முடிவில், கடந்த 120 முதல் 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90% வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு சிறுத்தை, கிணறுகளில் சிக்கியோ, அடித்தோ, வாகனங்களில் அடிபட்டோ இறக்கின்றன. கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 500 சிறுத்தைகள் இறந்திருக்கின்றன.
2019ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 218 சிறுத்தைகள் இறந்துள்ளன. 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019ல் இறப்பு 40% அதிகரித்துள்ளது. புலிகளைவிட, சிறுத்தைகள்தான் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரியது. புலிகளைப் போல சிறுத்தைகளையும் பாதுகாக்க அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.