நியூயார்க்
உலகப் புகழ் பெற்ற இத்தாலி ஓவியர் லியானார்டோ டா வின்சியின் ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலி ஓவியரான லியானார்டோ டா வின்சியின் ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. இவருடைய ஓவியங்களில் சுமார் 20 ஓவியங்கள் மட்டுமே தற்போது உள்ளதாக கூறப்படுகிறது. இவர் வரைந்த ஓவியங்களில் ஒன்று ”சால்வேடர் முண்டி” எனப்படும் ஏசு கிறிஸ்துவின் ஓவியம் ஆகும். இதற்கு உலக ரட்சகர் என தமிழில் பொருள். இந்த ஓவியம் 1505ஆம் வருடம் வரையப்பட்டதாக தகவல்கள் உள்ள்ன.
சால்வேடர் முண்டி ஓவியம் கடந்த புதன்கிழமை அன்று நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டீஸ் என்னும் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. சுமார் 19 நிமிடங்கள் இருவருக்கிடையில் இதை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. ஏலம் $225 மில்லியனில் இருந்து ஐந்து ஐந்தாக உயர்ந்து $260 மில்லியன் வரை சென்றது. பிறகு இருவரும் தாறுமாறாக விலையை உயர்த்தத் தொடங்கினர் ஒருவர் தொலைபேசி மூலமாகவும், மற்றவர் நேரிடையாகவும் கடும் போட்டியில் ஈடுபட்டனர். இறுதியில் தொலைபேசியில் ஏலம் கேட்டவருக்கு ஓவியம் விற்கப்பட்டுள்ளது.
விற்பனை விலை $400க்கு முடிவு செய்யப்பட்ட போதிலும் கட்டணங்களுடன் சேர்ந்து மொத்தம் 450.3 மில்லியன் மொத்தத் தொகை ஆகிறது. இந்த ஓவியம் கடந்த 2015ஆம் வருடம் மே மாதம் கிறிஸ்டிஸ் ஏல நிறுவனத்தால் $179.4 மில்லியனுக்கு வாங்கப் பட்டதாகும். தற்போது ஏலம் எடுத்தவர் பற்றிய விவரங்களை வெளியிட ஏல நிறுவனம் மறுத்து விட்டது.