கோவை:
தமிழக அரசியலில் அசாதாரண சூழலில், “சட்டமன்றம் கலைக்கப்படும்” என்று மு.க. ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அக் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை வந்திருந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
“தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழ் நிலையில் ஆட்சி அமைப்பதற்காக காபந்து அரசின் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆளுநர் அழைப்பாரா, அல்லது எடப்பாடி பழனிசாமியை அழைப்பாரா அல்லது யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று கூறி தி.மு.க.வை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறாரா என்று பேச்சு உலவுகிறது. இதை நான் சொல்லவில்லை, செய்தியாளர்கள் சொல்கிறார்கள்.
தி.மு.க.வை பொறுத்தவரை என்றைக்கும் கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க முயற்சித்தது கிடையாது. மக்களை சந்தித்து, மக்களிடத்திலே பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவை பெற்று அதன்பிறகு ஆட்சிக்கு வருவதையே திமுக விரும்புகிறது” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
மேலும், “ சொத்துக்குவிப்பு வழக்கில், நீதிமன்ற தீர்ப்பின்படி முதல் குற்றவாளி ஜெயலலிதா தான். இரண்டாவது குற்றவாளி சசிகலா.
முதலாவது குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு மற்ற மூவரும் சொத்துகள் சம்பாதித்து கொடுத்துள்ளனர் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதே வழக்கில் முன்பு நீதிபதி குன்கா தீர்ப்பு அளித்த போது ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. சதி செய்து விட்டது என்றார். அந்த வழக்கில் விடுதலையாக வேண்டி அவர்கள் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்தனர். ஆனால் இப்போது தீர்ப்பு வந்தவுடன் இதே ஓ.பன்னீர்செல்வம் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இப்போது பதவி சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மு.க. ஸ்டாலின் மேலும் பேசியதாவது:
“நாமெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் வந்து விடும் நிலை உள்ளது. எது வந்தாலும் சந்திக்க தி.மு,க. தயாராக இருக்கிறது.ஆகவே கட்சியில் சேர்ந்துள்ள அனைவரும் நாட்டை காப்பாற்ற, இனத்தை காப்பாற்ற, மொழியை காப்பாற்ற, நம் சந்ததியினரும் நலமுடன் வாழ தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள். இந்த அவல ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருங்கள்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின், தற்போதைய சட்டசபை கலைக்கப்படும் என்று பொருள்படும்படி பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.