சென்னை,

ட்டசபை கூட்டத்தை கவர்னர் உடனே கூட்டவேண்டும் என்று தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படுவதாக அறிவித்து இருப்பதாக வந்த தகவல்களை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்துக்கு திமுக தலைமை  அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ அன்பரசன், இ.கருணாநிதி, சுந்தர், வரலட்சுமி மதுசூதனன், ஜெ. அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், ரங்கநாதன், ரவிச் சந்திரன், கு.க.செல்வம், அரவிந்த்ரமேஷ், வாகை சந்திரசேகர், எஸ்.ஆர். ராஜா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தற்போதய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுத்து. அதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மான விவரங்கள்:

கலைஞர் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 60 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிற தமிழகம் மட்டும் அல்ல – இந்தியாவே போற்றும் மிக உன்னதமான தருணம்.சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13வது முறையாக போட்டியிட்டு வெற்றியை மட்டுமே சுவைத்த உன்னத தலைவர்.

புகழ்பெற்ற தமிழக சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள் என்றென்றும் வைரம்போல மிளிரும் -ஒளிரும்! நமக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரது உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றுள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சட்டமன்ற வைர விழாவும், 94 வது பிறந்த நாளும் நடைபெறும் இந்த நேரத்தில் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட எதிர்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் வீற்றிருக்கிறது என்பதை தலைவர் கலைஞர் இந்த கழகத்திற்கு சேர்த்த பெருமை என்றே இக்கூட்டம் கருதுகிறது.

பதினைந்தாவது தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரை கடந்த 11.5.2017 அன்று அதிமுக அரசு இறுதி செய்து வைத்துள்ளது.

சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை சீர்குலைத்து, தமிழக சட்டப் பேரவை விதிகளுக்கும், அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவுகளுக்கும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கும் விரோதமாக சட்ட மன்றக் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ளதை மன்னிக்க முடியாத ஜனநாயக படுகொலையாக திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது.

மானியக் கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு அரசியல் சட்டப் பிரிவு 204 -ன் படி நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, திட்டங்களுக்கும், செலவினங்களுக்கும் தேவையான நிதியை பயன்படுத்த தமிழக அரசுக்கு சட்டப்பேரவை அனுமதியளிக்கிறது.

ஆனால் இந்த நடை முறைகள் எதையும் பின் பற்றவில்லை. ஆர்.கே நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட சட்டப்பேரவையை கூட்டவில்லை.

சட்டமன்ற கூட்டத்தை கூட்டினால் வைரவிழா காணும் தலைவர் கலைஞரின் அருமை பெருமைகளை அவையில் பதிவு செய்து விடக்கூடாது என்ற நயவஞ்சகத்துடன் சட்டப்பேரவை கூட்டத்தை அதிமுக அரசு இறுதி செய்து வைத்திருக்கிறது. துறை சார்ந்த மானிய கோரிக்கைகளுக்கு பேரவையின் ஒப்புதல் பெறவில்லையென்றால் நிதி நிர்வாகம் மேலும் மோசமடையும் என்று நன்கு தெரிந்த தமிழக பொறுப்பு ஆளுநரும் இதை தட்டிக் கேட்காமல் அதிமுக அரசின் பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது அவருக்குள்ள கடமை களையும் அதிகாரங்களையும் மாநில நலனுக்காக செயல்படுத்தும் அணுகு முறையாகத் தெரியவில்லை என்று இந்த கூட்டம் வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

தலைவர் கலைஞர் காலத்தில் மக்களாட்சி முறையின் மாண்பையும் மதிப்பையும் போற்றிப் பாதுகாக்கும் மாபெரும் மன்றமாக திகழ்ந்த தமிழக சட்டப் பேரவை இன்றைக்கு அதிமுக ஆட்சியின் அத்து மீறிய தலையீடுகளால் தன் பெருமையையும், புகழையும் இழந்து நிற்கும் பரிதாப நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் நிதி நிர்வாகத்தை கண்காணிக்கும் அரசியல் சட்டப் பொறுப்புள்ள சட்டப் பேரவையைக் கூட்டாமல் திடீரென்று இரண்டாவது கூட்டத் தொடரை இறுதி செய்து வைத்திருப்பதற்கு இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகம் சந்திக்கும் வாழ் வாதாரப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும், பேரவை விதிகளின்படி வரவு செலவு திட்ட நடைமுறைகள் முழுமை பெறவும், நிதி அதிகாரம் படைத்த சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அரசு நிதியை செலவிடுவதை தவிர்க்கவும், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று இந்தக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர், பேரவைத் தலைவர், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆகியோரை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]