பெய்ரூட்
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்படும் ஜாகிர் நாயக் என்னும் இஸ்லாமிய போதகருக்கு லெபனான் வர தடை விதிக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக். இவர் தனது உரையின் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரப்பி வந்தார். பல இடங்களில் பண மோசடி செய்து அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு கோடிக்கணக்கில் பண உதவி செய்து வந்தார். இதைத் தொடர்ந்து இந்திய போலிசுக்கு பயந்து 2016ஆம் வருடம் ஜூலை 1ஆம் தேதி நாட்டை விட்டு ஓடி விட்டார்.
அவருக்கு சில இஸ்லாமிய நாடுகள் அடைக்கலம் கொடுத்தன. அங்கும் தனது உரையின் மூலம் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறார். இந்நிலையில் லெபனானின் இஸ்லாமியக் குழுவில் ஒன்றான சலஃபி குரூப் இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் தலைவர் ஷேக் ஹாஜன் அவரை சவுதியில் சந்தித்து தங்களின் நாட்டுக்கு வந்து உரையாற்றும் படி கேட்டுக்கொண்டார். இதற்கு ஜாகீர் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.
இதை தனது முகநூல் பக்கத்தில் ஷேக் வெளியிட்டார். இது லெபனான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதை எதிர்த்தனர். எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஜாகிர் லெபனான் நாட்டுக்கு வருவதை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
எதிர்ப்பாளர்களில் ஒருவரான மெர்ஹெப் என்னும் வழக்கறிஞர் ஜாகிர் தங்கள் நாட்டுக்கு வந்தால் அவருடைய தீவிரவாத ஆதரவுப் பேச்சின் மூலம் லெபனானின் அமைதிக்கு பெரும் கேடு ஏற்படும் எனவும், ஜிகாதி, தீவிரவாதம் போன்றவைகளை உண்மையான இஸ்லாமியர் என்றும் ஏற்க மாட்டார்கள் எனவும் கூறினார்.