டில்லி
முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று குன்னூர் அருகே நடந்த விமான விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த பதவியில் முதல் முதலாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். சுமார் 63 வயதாகும் அவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் : பிபின் ராவத் மற்றும் அவர் மனைவி மதுலிகா ராவத் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். நமது நாடு தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்து விட்டது. அவரது நாற்பதாண்டு தன்னலமற்ற சேவை எதனுடனும் ஒப்பிட முடியாதது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
பிரதமர் மோடி : ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்ததால் நான் வேதனை அடைந்துள்ளேன். இந்தியாவுக்கு அவர்கள் சிரத்தையுடன் சேவை செய்துள்ளனர். ஓம் ஷாந்தி
உள்துறை அமைச்சர் அமித்ஷா : முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்ட பிபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான இழப்பைத் தாங்கும் சக்தியைக் கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி : முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் இறந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா இந்தத் துயரத்தில் ஒன்றுபட்டு நிற்கிறது
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் : தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.