ராமேஸ்வரம்
நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் குடும்பத்தினர் ராமேஸ்வரத்தில் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான முகமது முத்து மீரான் மரைக்காயர் என்பவர் கலாமின் மூத்த சகோதரர் ஆவார். அவருக்கு தற்போது 104 வயது ஆகிறது.
நேற்று மாலை அவர் வயது மூப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். முகமது முத்து மீரான் மரைக்காயர் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்குத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டரில் ” முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் இன்று(07.03.2021) காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் ” எனப் பதிந்துள்ளார்.
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது டிவிட்டரில், “மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு.மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன் ” எனப் பதிந்துள்ளார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின், “முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் அப்துல் மீரான் மரைக்காயர் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.