கேரள சட்டப்பேரவை இடைத்தேர்தலில், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், 2 தொகுதிகளில் இடதுசாரிகள் முன்னணியும் வெற்றிபெற்றுள்ளன.
கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி, கடும் மழைக்கு நடுவே திரளான அளவில் மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகள் எண்ணப்பட தொடங்கியது முதல், இடதுசாரிகள் முன்னணியும், காங்கிரஸ் கூட்டணியும் 5 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது வட்டியூர்காவு மற்றும் கோன்னியில் இடதுசாரிகள் முன்னணியும், அரூர், எர்ணாகுளம், மஞ்சேஸ்வரம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளன.
வட்டியூர்காவு தொகுதியில் இடதுசாரிகள் முன்னணி வேட்பாளர் வி.கே பிரசாந்த் 54,830 வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மோகன்குமாரை 14,465 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் சுரேஷ் 27,453 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
கோன்னி தொகுதியில் இடதுசாரிகள் முன்னணி வேட்பாளரான கே.யு ஜெனிஷ்குமார் 54,099 வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மோகன்ராஜை 9,953 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில செயலாளர் கே. சுரேந்திரன், வெறும் 39,786 வாக்குகளை மட்டுமே குவித்துள்ளார். முன்னதாக இத்தொகுதியில் 2016ம் ஆண்டு டெப்பாசிட்டை பறிகொடுத்த இடதுசாரிகள் முன்னணி, தற்போது வெற்றி பெற்றிருப்பது கேரள அரசியல் விமர்சகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
அரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஷனிமோல் உஸ்மான் 68,851 வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடது முன்னணி வேட்பாளரான மனு சி.புலிக்கலை 1,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் பிரகாஷ் பாபு, 16,215 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினோத் 37,891 வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரிகள் முன்னணி ஆதரவு கொண்ட சுயேட்சை வேட்பாளரான மனு ராயை 3,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜகோபால், 13,351 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
மஞ்சேஸ்ரம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எம்.சி கமருதீன் 65,407 வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ரவீஷ் தந்த்ரி குன்டரை 7,923 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இத்தொகுதியில் இடதுசாரிகள் முன்னணி சார்பில் களமிறங்கிய சங்கர ராய் மாஸ்டர், 2016ம் ஆண்டு தேர்தலை தொடர்ந்து தற்போதைய இடைத்தேர்தலிலும் மீண்டும் வெறும் 38,233 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற மொத்தமுள்ள 5 தொகுதிகளில், 4ல் டெப்பாசிட்டை பறிகொடுத்த பாஜக, மஞ்சேஸ்வரம் தொகுதியில் டெப்பாசிட்டை தக்கவைத்துக்கொண்டது. ஏனெனினும் கடந்த 2016ம் ஆண்டு வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற பாஜக, இம்முறை அத்தொகுதியில் ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த இடைத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், 2016ம் ஆண்டு தேர்தலில் 5 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து 2 தொகுதிகளை தற்போது இடதுசாரிகள் முன்னணி கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.