மாறி வரும் சூழலுக்கு ஏற்ப ஐ.டி ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டால்தான் வேலையிழப்பை ( லே ஆஃப் ) தடுக்க முடியும் என்று ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் முதல் இந்தியாவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிககை தொடர்ந்துவருகிறது.  இதனால் ஐ.டி.நிறுவனங்களின் ஊழியர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்த 56,000 ஊழியர்கள் , இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளினால் வேலையிழப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம்,மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஐ.டி ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான்  வேலையிழப்பை தடுக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“மாறிவரும் காலத்திற்கேற்ப உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் முன்னேறி வருகின்றன. இந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்காக புதிய முறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இந்த வளர்ச்சியை புரிந்து கொண்டு செயலாற்றும் வகையில் , இந்திய ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும்  நாற்பது சதவீத ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தை (விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்ட்டிபிஷல் இண்டெலிஜன்ஸ் போன்றவை) கற்றுக் கொண்டு, தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

இந்த புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள ஐ.டி ஊழியர்கள் தவறினால், ல்,ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. ஏனென்றால் திறமை மிக்க வேலை ஆட்களை எந்த நிறுவனமும் வேலை நீக்கம் செய்ய விரும்புவதில்லை.

அதே நேரம், வேலை நீக்க நடவடிக்கைகள் ஐ.டி நிறுவனங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் நடவடிக்கை என்றாலும், வேலையிழப்புகளுக்கு ஏற்றவாறு இந்திய தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.

தவிர  ஊடகங்களில் கூறப்படும் லே ஆஃப் எண்ணிக்கை தவறான தகவல்.” என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.